வீட்டு குளியலறையை ஸ்பா போன்று மாற்ற

by Lifestyle Editor
0 comment

இன்றைய நவீன உலகில் ஸ்பா என்பது நம்மை தளர்த்திக் கொள்ள ஒரு சிறந்த இடமாக அமைகிறது. வெதுவெதுப்பான நீராவி குளியல், நறுமணம், இசை போன்றவை நம் மனதை தளர்த்த பெரிதும் உதவுகிறது. சினிமாவில் பார்ப்பது போல, விளம்பரங்களில் பார்ப்பது போல ரோஜா இதழ்கள் தூவிய, வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத் டப்பில் அமர்ந்து கொண்டு, உங்களுக்கு பிடித்தமான பழச்சாற்றை பருகியபடி அமர்ந்திருப்பது ஒரு சுகானுபவம்.

ஆனால் அதற்கு பின் உங்கள் கையில் கொடுக்கப்படும் கட்டண ரசீது அந்த சுகத்தை குறைக்கலாம். அதுவே மிக சிறிய மாற்றங்களுடன் உங்கள் வீட்டு குளியலறையை ஸ்பா போல் மாற்ற முடியுமென்றால் அதை விட இன்பம் வேறு கிடையாது.

அரோமாதெரபி எண்ணெய்கள்

லாவெண்டர், ஹெம்ப் விதைகள், தைலம், ரோஜா, ஸ்ட்ராபெர்ரி மற்றும் இதர நறுமண எண்ணெய்கள் கொண்டு உங்கள் குளியலறையில் வாசத்தை பரப்பலாம். டிப்யூசர் பயன்படுத்தி அதில் சில துளி எண்ணெய் சேர்த்து உங்களுக்கு விருப்பமான நறுமணத்தை குளியலறை முழுவதும் பரவ விடலாம். இதனால் அந்த அறை முழுவதும் நல்ல நறுமணம் வருவதுடன் உங்களை தளர்த்தவும் உதவுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் செடிகள்

டேபிளில் வளர்க்கப்படும் செடிகள் கொண்டு உங்கள் குளியலறையின் உட்புற அமைப்பை அலங்கரிக்கலாம். உங்கள் பாத் டப் அருகே சில செடிகளை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். சுவற்றில் அலமாரியை உருவாக்கி அதில் செடிகள் வளர்க்கலாம். குளியலறையின் அழகியலை மேலும் அதிகரிக்க செடிகள் உதவும், ஸ்பா உணர்வை மேலும் அதிகரிக்கும்.

மெழுகுவர்த்திகள்

குளியலறையை ஸ்பா அறையாக உணர்வதற்கு மெழுகுவர்த்திகள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. குளியலறையில் மெழுகுவர்த்தி வைப்பதால் அந்த அறையின் அழகு மட்டும் அதிகரிப்பதில்லை, ஸ்பாவில் மூழ்கும் போது கிடைக்கும் ஒரு ரிலாக்ஸ் உணர்வும் இதில் கிடைக்கும். நறுமணம் கொண்ட மெழுவர்த்திகள் பயன்படுத்துவதால் இனிமையான ஸ்பா அனுபவம் உங்களுக்கு கிடைக்க முடியும்.

தேவையற்ற பொருட்களை வெளியேற்றுங்கள்

பழைய ஷாம்பு பாட்டில்கள், கண்டிஷனர் ட்யூப் போன்றவை உங்கள் குளியலறையின் அழகை கெடுக்கலாம். காலியான பாட்டில்களை ஒரு மூடிய அலமாரியில் வைக்கலாம் அல்லது உங்கள் குளியலறையின் உட்புற அமைப்புக்கேற்ற வகையில் உள்ள நிறங்கள் கொண்ட பாட்டில்கள் கொண்டு மாற்றி அமைக்கலாம். இந்த சிறு மாற்றம் உங்கள் குளியலறைக்கு ஒரு நவீன தோற்றத்தை கொடுக்கும், அதுவே அதிகம் செலவு இல்லாமல். குளியலறையில் பயன்படுத்தும் துண்டுகளை திறந்த அலமாரியில் வைக்கலாம். இதனால் அறையின் உட்புற அமைப்பு சீராக தோற்றமளிக்கும். ஆணியில் தொங்கவிடப்படும் துண்டுகளைக் காட்டிலும் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்ட துண்டுகள் அறையின் அமைப்பை அழகாகக் காட்டும்.

கம்பள விரிப்பு

உங்கள் பாத்டப்பிற்கு அருகில் அழகான கம்பள விரிப்பை விரித்து வைக்கலாம். மேலும் டேபிளில் குளியல் ஸ்க்ரப் வைத்துக் கொள்ளலாம். ஸ்பா உணர்வை மேலும் அதிகரிக்க மற்றும் ஆடம்பரமாக உணர வைக்க, அதே நேரத்தில் பொழுதுபோக்கை அதிகரிக்க குளியல் பாம் பயன்படுத்தலாம். இதனால் நீரின் நிறம் மாறி, மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்.

Related Posts

Leave a Comment