சுமங்கலியாக இறந்தவரின் ஆசியை பெற

by Lifestyle Editor
0 comment

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, திருமணம் போன்ற விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாகச் செய்யப்படுவது. பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.

சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும், மகனுக்கு செய்யும்போது, வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.

மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது. இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம். இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம். இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.

அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப்புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும். இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.

இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும். குளித்து வந்த பெண்களுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜலம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும். பெண்கள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மனையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை, சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம். அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும். இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும்.

அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். சுமங்கலியாக இறந்தவரின் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு, பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.

Related Posts

Leave a Comment