குடியரசு தினத்தன்று டிரக்கடர்களை கொண்டு தலைநகர் முற்றுகை…

by Lifestyle Editor
0 comment

டெல்லி: மத்திய அரசு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியை டிரக்டர்கள் மூலம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 39ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றால் அதன் பின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் முற்றுகை

இந்நிலையில் டெல்லியில் போராடும் 40 விவசாயச் சங்கங்கள் சார்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய தலைவர் தர்ஷன் பால் சிங், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியை டிராக்டர்களை கொண்டு முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படும் என்றார். மேலும், இந்த பேரணி கிஷான் பேரணி(விவசாயிகளின் பேரணி) என்று அழைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தாண்டு குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

உடன்பாடு இல்லை

இதுவரை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளில் மின் கட்டண உயர்வு மற்றும் விவசாய கழிவுகளை எரிக்க விதிக்கப்படும் அபராதம் ஆகிய பிரச்சினைகளில் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. விவசாய சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றில் இரு தரப்பிற்கும் இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இருப்பினும்,மத்திய அரசு இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த பிரச்சினைக்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அரசு பொய் கூறுகிறது

மேலும், விவசாய தலைவர் குர்ணம் சிங் சோடுனி பேசுகையில், “கடைசி பேச்சுவார்த்தையின்போது , அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பதாகக் கூறும் 23 பயிர்களையும் அதே விலைக்கு அரசு கொள்முதல் செய்யுமா என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் மாட்டோம் என்றே பதிலளித்தனர். இருப்பினும், அரசு ஏன் நாட்டு மக்களுக்குத் தவறான தகவல்களை அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

50 பேர் பலி

டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 39ஆவது நாளாக விவசாயிகள் அங்குத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 விவசாயிகள் பல காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment