ரம்யாதான் இந்த வாரம் வெளியேற்றபடுவாரா? – பிக்பாஸ் 87–ம் நாள்

by Web Team
0 comment

பிக்பாஸ் வீட்டில் செலிபிரேஷன் வாரம் என்பதால், சண்டை சச்சரவுகள் இன்றி ஜாலியாகப் போய்க்கொண்டிருக்கிறது. வரும் உறவினர்கள் போட்டிகளார்களுக்கு உற்சாகம் தந்து வருகிறார்கள். ஷிவானியின் அம்மாவைத் தவிர. அவர் கடும் கோபத்துடன் நடந்துகொண்ட சோகம் ஷிவானியிடம் நேற்றும் தென்பட்டது. மாறாக, டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். மற்ற விஷயங்களை விரிவாகப் பார்ப்போம்.

வேக்கப் ஸாங் முடிந்தபிறகு, ஃபிரீஸ், ரிலீஸ் டாஸ்க்கைத் தொடர்ந்தார் பிக்கி. அதற்காக ரம்யா பெரிய பாத்திரத்தைத் தூக்கி வரும்போதா ஃப்ரீஸாகச் சொல்வீர்கள்? கேபி, ஷிவானி, ஆஜித் என ஒவ்வொருவராக வந்து அந்த ஆட்டத்தில் இணைந்தார்கள்.

இன்னொரு பக்கம் பொங்கலை எடுத்து வாயில் வைக்கப்போன பாலா ஃப்ரீஸானார். அவரைக் கிண்டல் செய்ய கொஞ்ச வந்த ஆரியும் சிலையானார். மந்தையில் பிரிந்த ஆடுகள் கொஞ்சிக்கொண்டிருந்தன. ரம்யா கலாய்த்துக்கொண்டிருந்தார்.

மேக்கப் போட்டுக்கொண்டிருந்த கேபியைச் சிலையாக்கினார் பிக்கி. அங்கே வந்த சோம் அவரிடம் விளையாட, சோமை சிலையாக்கி, கேபியை விடுதலை செய்தார். சோம் முகத்தில் கேபி கோலமிட, அடுத்த நிமிடம் காட்சி மாற கேபி முகத்தில் சோம் கோலம் போட்டார்.

எல்லோரையும் சிலையாக்கி, ரம்யாவின் தம்பி உள்ளே அனுப்பப்பட்டார். செம ஜாலியான ஆள் போல. எல்லோரையும் ஓட்டித்தள்ளினார். எல்லோரையும் ப்ரோ என்று சொன்னவர், சோம்ஸ் மச்சான் என்றது கவனிக்கத்தக்கது.

ஆரி ஆர்மி இந்த வாரம் ரம்யாவை வெளியேற்ற தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அதனால், இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டாலும் படலாம். டைட்டில் வின்னர் என நினைத்த ரம்யாவா என்று ஆச்சர்யப்படலாம். ஆனால், சென்ற சீசன் போல வாக்குகள் செலுத்துவதில் ஈஸியாக இல்லை. அதனால், நூறு பேரின் வாக்குகளும் முடிவை மாற்றிவிடலாம். அதனால்தான் அர்ச்சனா, நிஷா, ஷனம் எல்லாம் வெளியே போனார்கள். இவர்கள் எல்லாம் ஆரிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றியவர்கள். கடைசி உதாரணம் அனிதா. அவர் அன்றைக்கு கோபத்துடன் பேசாமல் இருந்தால், ஆரி ஆர்மி அவர் மீது வன்மத்துடன் மற்றவர்களுக்கு ஓட்டுப் போட்டு காப்பாற்றியிருக்காது. ஆஜித் வெளியேறியிருப்பார்.

இந்த வாரம் ஆரி ஆர்மியின் குறி ரம்யா மீது. இதை நன்கு உணர்ந்த ரம்யாவின் தம்பி ஆரி ஆர்மியை கூல் செய்யும் விதமாக ‘என் தலைவன் எங்கே’ என ஆரியைத் தேடினார். இதன்மூலம் அவரின் ரசிகர்கள் கொஞ்சம் சமாதானம் ஆவார்கள் என நினைத்திருக்கலாம். இதை ரம்யாவிடம் வேறு விதமாக வெளிப்படுத்தினார். ‘நீ இந்த வாரம் வெளியே வந்தால் அதுக்கு நீ காரணம் இல்ல’ என்றார். அதைக் கேட்டதும் ரம்யா கொஞ்சம் அப்செட்டானார். இந்த இடத்தில் அனிதா இருந்திருந்தால் பிக்பாஸ்க்கு அழுகை காட்சிகள் கிடைத்திருக்கும்.

ஸ்டோர் ரூமிலிருந்து ரம்யாவின் அம்மாவை அனுப்ப, ‘என்னோட பேட்டரி’ என ஓடிக்கட்டிக்கொண்டார். நல்லா விளையாடுற அப்படியே விளையாடு என்று அட்வைஸ் பண்ணினார். ரம்யாவிடம் கோபப்படாதீங்க என ஆரியிடம் கேட்டுக்கொண்டது ரம்யா ஃபேமிலி. இந்த வாரம் ரம்யா எஸ்கேப்பாகி விட்டால் ஆரி ஆர்மியின் திட்டம் கலையும்.

ரியோவின் மனைவி ஸ்ருதி உள்ளே வந்து, இன்னும் கலகலப்பூட்டினார். ‘ரம்யாவை தூக்கினது உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு கடுப்பு’ என்றதும், ‘ஃப்ரெண்ட்ஸ்க்கு மாதிரி தெரியலையே’ என்றதும் வீடே கலகலப்பானது. இருவரும் நிறைய அழுதார்கள். கொஞ்சிக்கொண்டார்கள். முத்தம் கொடுத்துக்கொண்டார்கள்.

ஸ்ருதி வரும்போது ரியோ அழுதார். ஸ்ருதிக்குப் பிக்பாஸில் நேரம் முடிந்து புறப்படுகையில் ஸ்ருதி அழுதார். செமி சீரியல் காட்சிகள் போல இருந்தாலும், இருவருக்குமான அன்பு வெளிப்பட்டது.

சோம்ஸின் பருத்த ஜெராக்ஸ் போல, அவரின் தம்பி வந்தார். பாட்டுப் பாட வைத்தார். கொஞ்சம் கலாய்த்தார். ஆனால், பெரியளவில் கண்டண்ட் கிடைக்காது என்று தெரிந்ததும் சீக்கிரமே அனுப்பி விட்டார்.

இன்னும் சில ஓரிரு நாட்களுக்கு மற்றவர்களின் உறவினர்களும் வந்து சேர்வார்கள்.

Related Posts

Leave a Comment