ஆருத்ரா தரிசனம்- சந்தன காப்பின்றி காட்சியளித்த பச்சை மரகத கல் நடராஜர்

by Web Team
0 comment

திரு உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பச்சை மரகதக் கல்லினால் ஆன நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீராம பிரானின் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த கோயிலில், விலை மதிப்பற்ற பச்சை மரகதக் கல்லினால் ஆன ஆளுயர நடராஜர் சிலை உள்ளது. மரகதக் கல் ஒலி அதிர்வுகளை தாங்காமல் உடைந்து விடும் என்பதால், அந்த சிலை வருடம் முழுவதும் சந்தனம் பூசி காத்து வரப்படுகிறது.

வருடத்திற்கு ஒரு நாள், ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டும் நடராஜர் சிலையின் சந்தனக்காப்பு அகற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு விடும். அதன் பிறகு அடுத்த வருடம் தான் சந்தனக்காப்பு அகற்றப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் இன்று கொண்டாடப்படுவதை ஒடடி, நேற்று மரகத நடராஜரின் சந்தனக்காப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து, பால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசன அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், குறைந்த அளவிலான பக்தர்களே கோயிலில் சுவாமியை தரிசித்து சென்றனர்.

Related Posts

Leave a Comment