பிரித்தானியாவில் பொது மக்களின் உடல் நலனை மேம்படுத்துவதற்காகவும், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கையாள்வதறகாகவும், வரும் ஏப்ரல் 2022 முதல் கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு அதிகம் உள்ள தின்பண்டங்களுக்கான ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ எனும் விளம்பரங்களையும் மற்றும் உணவகங்களில் சர்க்கரை குளிர்பானங்களை இலவசமாக நிரப்பிக் கொள்ளும் திட்டத்தையும் அரசாங்கம் தடை செய்யவுள்ளதாக திங்களன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உடல்நலக்குறைவு என்பது நாட்டின் மிகப்பெரிய நீண்டகால பொது சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும். பிரித்தானியாவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், மூன்று குழந்தைகளில் ஒருவர் அதிக எடை அல்லது பருமனாகவும் இருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, அத்தகைய தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களை, கடையில் விளம்பரப்படுத்துவதை கட்டுப்படுத்தும், மேலும் ஆரோக்கியமற்ற விளம்பரங்கள் செக்அவுட் செய்யும் இடங்கள், கடை நுழைவாயில்கள் அல்லது இடைகழிகள் முடிவில் அனுமதிக்கப்படாது.
இது குறித்து பேசிய பிரித்தானியாவின் பொது சுகாதார அமைச்சர் ஜோ சர்ச்சில், “நாங்கள் விளம்பரங்களை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்ய எளிதாக இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறோம். அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட உதவும் சூழலை உருவாக்குவது நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியமானது” என்று கூறினார்.
கடந்த ஜூலை மாதத்தில் ஜங்க் ஃபுட் தொடர்பான “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற டில்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு முதலில் முன்மொழிந்தது, மேலும் இரவு 9.00 மணிக்கு முன் வரும் ஜங்க் ஃபுட் தொடர்பான டிவி மற்றும் ஆன்லைன் விளம்பரங்களை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளையும் அறிவித்தது.
கடந்த மாதம் அரசாங்கம் ஒரு படி மேலாக சென்று ஆரோக்கியமற்ற உணவை ஆன்லைனில் விளம்பரப்படுத்த முற்றிலுமாக தடை விதிக்க முன்மொழிந்தது.
அதிக எடையுடன் இருப்பது கொரோனா போன்ற கடுமையான நோய்த்தொற்று அல்லது இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து உடல் எடையை குறைப்பதற்கான தனது சொந்த தேவையைப் பற்றி பொதுவெளியில் பகிரங்கமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.