குரு பகவானுக்கு விரதம் இருப்பது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தினர் நம் முன்னோர்கள். முதலில் தாய் பிறகு, ‘இவர் தான் உன் தந்தை’ என்று அறிமுகம் செய்வதால் இரண்டாவது தந்தை. பிறகு, ‘இவர் தான் உனக்கு குரு’ என்று தந்தை நல்ல ஆசிரியரிடம் புதல்வனை ஒப்படைப்பதால் மூன்றாவது குரு. பிறகு, குரு பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது ‘இது தான் தெய்வம், இதனை வழிபட்டால் வரம் கிடைக்கும்’ என்று சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துவதால் அடுத்தது தெய்வம் இடம்பெறுகின்றது.

ஆக குருவருள் இருந்தால் தான் நமக்குத் தெய்வத்தின் திருவருள் கிடைக்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது. அப்படிப்பட்ட குருவை நாம் முறையாக வழிபட்டால் மங்கல ஓசையும், மழலையின் சப்தமும் இல்லத்தில் கேட்கும், புகழும், பெருமையும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குருவின் பார்வையால் மாங்கல்ய தோஷங்கள் அகலும். மகத்தான பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

நவ கிரகத்திலுள்ள குருவை வியாழக்கிழமையன்று சென்றுவழிபட்டு வரலாம். குருவுக்கு பிரதிநிதியாக விளங்கும் மகான்கள், ஞானிகள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் சிறப்பாகும். தென்முகக் கடவுளை வழிபடும் பொழுது அதற்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு இவைகளால் அர்ச்சனை செய்து குருவிற்குரிய துதிப்பாடல்களை மூன்று முறை படித்து வழிபட்டால் நிச்சயம் நினைத்த காரியம் கைகூடும். சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

Related Posts

Leave a Comment