திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழாவின்போது ஏற்பட்ட மோதலில் பீகாரை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை விடுதி மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது, மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பாட்னாவை சேர்ந்த ஆதித்யா ஷர்மா என்ற மூன்றாமாண்டு மாணவரின், கழுத்தில் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளவேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அதே கல்லூரியில் பயிலும் 5 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை விமானம் மூலம் பீகார் கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.