ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 2-வது வெற்றியை பெறுமா?

by Lifestyle Editor
0 comment

கோவா:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது.

சென்னையின் எப்.சி. 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி 5-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) இன்று மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிகறது.

தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்ற சென்னையின் எப்.சி. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கவுகாத்தியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அதேநேரத்தில் கவுகாத்தி அணியை வீழ்த்துவது சென்னைக்கு சவாலானதே. கவுகாத்தி அணி 2 வெற்றி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

தோல்வியை சந்திக்காத நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சென்னையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூர்-கேரளா அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி ஒரு வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், கேரளா 2 டிரா, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளன.

பெங்களூர் அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. கேரளா முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

Related Posts

Leave a Comment