விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்..?

by Lifestyle Editor
0 comment

சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வினவியுள்ளார்.

மேலும், விவசாயிகள் அறிவித்திருக்கும் டிசம்பர் – 14 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு தனது கட்சி சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

போராட்டம் தீவிரம்

கடந்த 3 வாரங்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வதால் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நாளுக்குநாள் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

மறக்க முடியாது

விவசாயிகளின் உரிமைகளுக்காக டெல்லியில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெறும் வரை போராடுவோம் என்பதில் விவசாயிகள் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். பல இன்னல்களை சந்தித்தாலும் எந்தவொரு நிலையிலும் சோடை போகாமல் உழைப்பவர்கள் விவசாயிகள். தான் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தன்னுடைய உரிமைகள் மறுக்கப்படும் போதும் உலகுக்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள் என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

உரிமைக்குரல்

அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்காமல் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பை உருவாக்கியிருப்பது ஏற்புடையதல்ல. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளின் உரிமைக்குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு செயல்படுவது உலகளவில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும்.

முழு ஆதரவு

பாரத பிரதமர் அவர்கள் விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் ? விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பிரதமர் செயல்படுவது வேதனையளிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை (14.12.2020) முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு போராட்டத்திலும் பங்கேற்கும்.

Related Posts

Leave a Comment