ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஹாரி, ரிஷப் பண்ட் அபார சதம்

by Lifestyle Editor
0 comment

சிட்னி:

இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பும்ரா தாக்குப்பிடித்து விளையாடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா 194 ரன்னில் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 108 ரன்னில் சுருண்டது. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி பந்து வீச்சில் அனல் பறந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலும், அடுத்து இறங்கிய ஷுப்மான் கில்லும் நிதானமாக ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 100 ரன்களை எடுத்தது.

அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்த போது ஷுப்மான் கில் 65 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து ஹனுமா விஹாரி இறங்கினார். முதலில் இருந்தே அவர் பொறுப்புடன் ஆடினார். விஹாரி-அகர்வால் ஜோடி 53 ரன்கள் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் 61 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரகானே விஹாரியுடன் ஜோடி சேர்ந்து 78 ரன்கள் சேர்த்தார். ரகானே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் விஹாரியுடன் ஜோடி சேர்ந்து மேலும் விக்கர் விழாமல் பார்த்துக் கொண்டார்.

ரிஷப் பண்ட் சற்று அதிரடியாக ஆடினார். இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர்.

இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 104 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 103 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா ஏ அணியை விட இந்திய அணி 472 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment