ஆண்டி கோலத்தில் பாலகனாக அருள்பாலிக்கும் முருகன்

by Web Team
0 comment

கந்தனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி என்ற பெயர் தற்போது நிலைத்திருந்தாலும், இதன் ஆதிகால பெயர் ‘திருவாவினன்குடி’ என்பதாகும். மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த இடம் இது. அதேபோல் மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது.

மலை உச்சியில் உள்ள முருகனின் சிலையானது, நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர், போகர் என்னும் சித்தர் ஆவார். சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில்தான், இந்த நவபாஷாண சிலையை போகர் இங்கு நிறுவியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷசமாக கொண்டாடப்படும்.

மலை உச்சியில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி, ஆண்டி கோலத்தில் பாலகனாக அருள்பாலிக்கிறார். இவருக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமானதாகும். இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் பழநி திருக்கோவில் அமைந்துள்ளது.

Related Posts

Leave a Comment