மரக்கன்று நட்டு நினைவைப் போற்றிய ஈஷா!

by Lifestyle Editor
0 comment

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழாவை நடத்தி பாரம்பரிய நெல் ரகங்களை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் ஜெயராமன். அவரது நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே குளூர் சிவலிங்கபுரத்தில், கே .எஸ். ராஜேஷ்வரன் என்கிற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் நடு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி , இந்த மரம் நடு விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். தேக்கு, கருமருது ,செம்மரம், சந்தனம் ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன்மூலம் சுற்றுச்சூழலும் மேம்படும் என்பதுடன் விவசாயியின் பொருளாதாரமும் மேம்படும் என காவிரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நெல் ஜெயராமன் ஈஷாவின் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆதரவு அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா நடத்தும் பொழுது மரக்கன்றுகளை நட்டு வைத்து தான் நிகழ்ச்சியை தொடங்குவார். ஈஷாவுடன் இணைந்து சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். சத்குரு நடத்திய “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” என்ற சுற்றுச்சூழல் பேரணியின்போது திருச்சியில் பங்கேற்று ஆதரவளித்து பேசியுள்ளார். விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்ட நெல் ஜெயராமன் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, அவரது நினைவு நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காவிரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் இதுவரை 80 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர் என்றும் தமிழ்மாறன் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment