ஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டதா?

by Lifestyle Editor
0 comment

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக யசுவேந்திர சாகல் மாற்று வீரராக களம் இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் அசத்தினார். 20-வது ஓவரில் 2-வது பந்தில் அவரது ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. தலையில் பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி அவருக்கு பதிலாக சுழற்பந்து வீரர் சாகல் பந்து வீச்சில் களம் இறங்கினார்.

அவர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ஒரே இடத்துக்கு 2 பேர் ஆடினர். பேட்டிங்கின்போது ஜடேஜாவும், பந்துவீச்சின் போது சாகலும் விளையாடினர்.

மாற்று வீரர் வி‌ஷயத்தில் இந்திய அணி விதிமுறையை மீறியதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

ஜடேஜா ஹெல்மெட்டில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது என்றால், உடனடியாக இந்திய அணியின் உடல் தகுதி நிபுணர் நிதின் படேல் களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஜடேஜாவின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று அவர் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஜடேஜா தொடர்ந்து 4 பந்துகள் விளையாடி 9 ரன்கள் சேர்த்தார். ஓய்வு அறைக்கு சென்று தன்னால் விளையாட முடியாது என்று கூறி மாற்று வீரரை தேர்வு செய்யுமாறு சொன்னார். இதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

ஜடேஜாவுவின் காயத்தை உடல் தகுதி நிபுணர் பரிசோதிக்க சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவருக்கு உண்மையிலேயே தலையில் காயம் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நல்ல நோக்கத்தோடுதான் மாற்று வீரர் விதிமுறை ஐ.சி.சி.யால் கொண்டுவரப்பட்டது. இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறி சாகலை களம் இறக்கியதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுபோன்ற நேரங்களில் ஐ.சி.சி. சிறிது கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு வீரருக்கு மாற்று வீரர் என்ற திட்டமே இந்த சம்பவத்தால் கேள்விக் குள்ளாகி இருக்கிறது. விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக வளைக்க எந்த அணியையும் ஐ.சி.சி. அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment