பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் – கல்வி அமைச்சரிடம் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

by Lankan Editor
0 comment

நாட்டில் உருவாக்கியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என்ற ஒன்றை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘நாளை (திங்கட்கிழமை) தரம்6 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள்.

ஆனால், இன்று வரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே செல்லுகின்றது. ஆடைத்தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொட கொத்தணியும் நாடு முழுவதும் பரவியுள்ளது.

க.பொ.த.உயர்தர பரீட்சை ஆரம்பிக்கும்போதே ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை நடாத்துங்கள் எனக் கேட்டோம்.

ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களும் பரீட்சை எழுதினர். அதனை இயல்பு நிலையென கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர். அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம்.

நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு சில அறிவுறுத்தல்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. ஆரம்ப பிரிவுகள் (1-5) இணைந்துள்ள இடைநிலை, மேல்நிலைப் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா?

வெவ்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும், வேறு மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகள் இயங்கும் பிரதேசங்களுக்கு எவ்வாறு செல்வது அவர்களின் கடமை ஒழுங்கு என்ன போன்ற விடயங்களில் தெளிவான அறிவித்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment