தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு

by Lifestyle Editor
0 comment

புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டி. நடராஜன். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2017 ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.

2018-ம் ஆண்டில் இருந்து நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 13-வது ஐ.பி.எல். போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. யார்க்கர் பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சேலத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன் இந்த ஐ.பி.எல். போட்டியில் 16 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 யார்க்கர் பந்துகளை இந்த தொடரில் வீசினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரபல வேகப்பந்து வீரருமான கபில்தேவ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன்தான். இந்த இளம் வீரருக்கு பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர்தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல கடந்த 100 ஆண்டுகளாகவே அது சிறந்த பந்தாகும். யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளை சரியாக அவர் பின்பற்றினார்.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசுவதை விடவும், சுவிங்தான் முக்கியம் என்பதை அறிந்துள்ளார்கள்.

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சந்தீப் சர்மா பந்தை நன்கு சுவிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உருவாக்கினார். எனவே வேகமல்ல சுவிங்தான் முக்கியம் என்பதை பந்து வீச்சாளர்கள் அறிய வேண்டும்.

வீராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டோடு நாடு திரும்புகிறார். முன்பெல்லாம் எங்களால் இப்படி போய்விட்டு வர முடியாது.

கவாஸ்கர் தன்னுடைய மகனை பல மாதங்களாக பார்க்கவில்லை. அது வேறு சூழல். இப்போது நிலைமை மாறிவிட்டது. கோலி தன்னுடைய அப்பா இறந்தபோது மறுநாளே ஆட வந்து விட்டார்.

தற்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். நல்லதுதான். அவருக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட, குழந்தையை ஏந்தும் ஆர்வம்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிக்கிறேன்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment