தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது……

by News Editor
0 comment

!!!!!!!!!!
……வஉசியும் , அந்த தைபூச மண்டமும் கண்களுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள்
அந்த தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது……
!!!!!!!!!!!!
அது அமெரிக்கா மெல்ல எழும்பி, ஜப்பான் கிழக்கே ரஷ்யாவினை வீழ்த்தி ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எச்சரிக்கை மணி அடித்த காலம்
உலக வல்லரசுபட்டத்தை பிரிட்டன் இழக்கும் என்ற அறிகுறி தென்பட்ட 1908ம் காலம். கொஞ்சம் அச்சமுற்ற பிரிட்டன் கடுமையான முகத்தை காட்ட ஆரம்பித்தது, குறிப்பாக பணம் அதன் பெரும் குறிக்கோளாது கூடவே கடுமையான இறுக்கங்களும் சட்டங்களும் வந்தன.
கம்யூனிசம் அலை அடித்த காலமென்பதால் தொழிலாளர் மேல் பெரும் கடிவாளம் இட்டிருந்தனர்
அந்த 1908ல் நெல்லையில் பஞ்சாலைகள் அதிகம், தாமிரபரணி நதியின் தொடக்க பகுதியான அம்பை பகுதி முதல் தூத்துகுடி வரை ஏராளமான மில்கள் இருந்தன, நதிகரையிலும் அடுத்த பகுதியிலும் விளையும் பருத்தி இங்கேயே நூல்களாயின‌
அந்த தொழிலாளரின் நிலை மகா மோசமாய் இருந்தது, அந்த சிக்கலில் உள்ளே வந்தார் வ.உ சிதம்ரனார், கூடவே சுப்பிரமணியம் சிவா இவர்களுக்கு ஆதரவாக பாரதியார்.
வ.உ.சி அப்பொழுது தென்னகம் மட்டுமல்ல அகில இந்தியாவிலே பெரும் தலைவர், இரண்டாம் திலகர் என கொண்டாடபட்டார், அவர் கப்பல் எல்லாம் விட்டு வெள்ளையனை அலற வைத்தது அந்நேரமே
பெரும் செல்வாக்கோடு அவர் நெல்லை பக்கம் சுற்றி வர வெள்ளையன் முதலில் மிரட்டினான், கெஞ்சினான், எல்லா வித்தைகளையும் காட்டினான், வ.உ.சி அசரவில்லை
போராட்டம் வெடித்தது, பெப்ரவரி 26ல் வெடித்த போராட்டத்தை மார்ச் 03ம் தேதிவரை மிகபெரிதாக மாற்றிகாட்டினார் வ.உ.சி.
அப்பொழுது கலெக்டர் ஆஷ், அவனுக்கு மேலதிகாரி வின்ச்
இருவரும் பேசிபார்த்தும் தொழிலாளர் ஊதிய உயர்வின்றி போராட்டம் ஓயாது என அறிவித்தார் வ.உ.சி
அவரின் அழைப்பினை ஏற்று ரிக்சா , சலவை தொழிலாளி, பரிசல்காரன், வியாபாரி, அலுவலர், ரயில்வே ஊழியர் என எல்லோரும் திரண்டனர், நெல்லை ஸ்தம்பித்தது
விளைவு ஊதிய உயர்வுக்கு ஆங்கில அரசு இறங்கி வந்தது, பஞ்சாலை தொழிலாளர் மட்டுமல்ல எல்லா தொழிலாளருக்கும் ஊதிய உயர்வு 10 மணி நேரம் வேலை, ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடைத்தது
கேட்டதை கொடுத்தாலும் வ.உ.சியினை குறிவைத்தது மேலிடம், ஆஷ் துரையின் கடிதம் அப்படி இருந்தது.
“இந்த சிதம்பரம் என்பவனை ஒடுக்காவிட்டால் மாபெரும் சிக்கலை நம் ஆட்சி சந்திக்கும், கட்டபொம்மன் காலத்தில் இருந்து இம்மக்கள் வித்தியாசமானவர்கள், சரியான தலைவன் கிடைக்கும் பட்சத்தில் பெரும் சவாலாக உருவெடுப்பார்கள்
இந்த சிதம்பரம் ஏற்கனவே கப்பல் எல்லாம் விட்டு நம் வியாபரத்தை கெடுத்துகொண்டிருகின்றான், இப்பொழுது பஞ்சாலை பக்கமும் வந்துவிட்டான், இன்னும் விட்டால் பெரும் ஆபத்து”
இந்த ரகசிய கடிதம் பிரிட்டன் மேலிடத்தில் விவாதிக்கபட்டு முடிவு அன்றே எடுக்கபட்டு வாய்ப்புக்காய் காத்திருந்தனர்
வாய்பினை கொடுத்தது கல்கத்தா சம்பவம், ஆம் விபின் சந்திரபால் எழுதிய கட்டுரை தொடர்பாக கைதுசெய்யபட்டு பின் விடுவிக்கபட்டார், அந்த விடுதலையினை தேசமே கொண்டாடியது
அந்த கொண்டாட்டத்தை மகா உற்சாகமாக கொண்டாடினார் வ.உ.சி.
யானைமேல் சந்திரபாலின் படத்தை வைத்து, நெல்லையெங்கும் சுற்றி வந்து நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் தைபூச மண்டபத்தில் வைத்து பெரும் கூட்டம் கூட்டினார்
கூட்டம் வந்தே மாதரம் என முழங்கி ஆர்பரித்தது
வாய்ப்புக்காய் காத்திருந்த வெள்ளையன் களமிறங்கினான் குறிப்பாக ஆஷ் அதை விவரமாக செய்தான்
நாட்டின் அமைதியினை கெடுக்கும் கூட்டம் என வ.உசி மற்றும் சிவாவினை கைது செய்தான், ஆம் கலவரம் வேண்டும் அந்த கலவரத்தில் பலரை கொன்றாவது வஉசிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது அவன் திட்டம்
அவன் திட்டபடியே வஉசியினை கைது செய்யவும் கலவரம் வெடித்தது, மாபெரும் கலவரம் சில நாட்கள் நீடித்தது
அப்பொழுது சுதந்திர கொடியினை அரசு அலுவலகம் பண்டகசாலை எல்லாம் ஏற்றி பிரிட்டிசாரை அலற வைத்தது நெல்லை
முதல் சுதந்திரகொடி தாமிரபரணி கரையில்தான் கம்பீரமாக பறந்தது, வரலாற்றின் மறைந்த பக்கம் அவை
ஆம் 1908ல் முதல் சுதந்திர கொடி அங்குதான் மார்ச் 13ம் தேதி பறந்தது.
ஆத்திரமுற்ற ஆஷ் துப்பாக்கி சூடுநடத்தி 4 பேரை கொன்றான், எனினும் நிலமை கட்டுக்கு அடங்கவில்லை
நெல்லையில் பறந்து கொண்டிருந்த‌ சுதந்திரகொடியோடு நெல்லை ஆர்பரிக்க மாபெரும் கலவரம் மூண்டது
அது திட்டமிடபடவில்லை, பெரும் முன்னேற்பாடு இல்லை ஆனால் வ.உசி மேல் கைவைத்ததால் நடந்தது
விஷயம் பிரிட்டன் பாராளுமன்றம் வரை பரவியது, 1857ல் பிரிட்டன் அரசுக்கு இந்தியா சென்றபின் நடந்த பெரும் கலகம் அது என்பதில் லண்டன் கவலை கொண்டு பிரச்சினையினை தீவிரமாக நோக்கியது
ஆஷூக்கு உத்தரவுகள் வந்தன‌
வ.உசி தமிழகத்தை விட்டு வெளியேற குறிப்பாக நெல்லை பகுதியினை விட்டு வெளியேற சம்மதித்தால் விடுதலை செய்வோம் என தந்திரமாக கேட்டான் ஆஷ்
வ.உ.சி சம்மதிக்கவில்லை , தன் தனிபட்ட அதிகாரத்தில் தேசவிரோத வழக்காக அதை மாற்றினான் ஆஷ்
அந்த வழக்கில்தான் வ.உ.சி கடுங்காவல் சிறைபெற்று செக்கிழுத்தார்
அப்பொழுதும் “இது செக்கல்ல பாரதமாதாவின் தேர்” என சந்தோஷமாக இழுத்தான் அப்பெருமகன், சுப்பிரமணிய சிவாவுக்கு தொழுநோய் வந்ததும் இக்காலத்திலே
அதன் பின் கப்பல் போனது, சொத்து போனது, போராட்டமும் திலகர் கையில் இருந்து காந்தி கைக்கு சென்றது
காந்தி வ.உசியினை திட்டமிட்டு மறைத்ததையும் நுணுக்கமாக அவமானபடுத்தி அலைகழித்து முடக்கியதையும், காங்கிரஸ்லில் அவரை தவிர்த்ததையும் பல இடங்களில் கண்டோம்
வெளிவந்த சிதம்பரம் வலுவிழந்தார், பழைய செல்வாக்கு இல்லை
ஆயினும் தாமிரபரணிகரை தொழிலாளர் நல் ஊதியமும் விடுமுறையும் பெறுவதில் அவருக்கு ஆனந்தம் இருந்தது
அந்த தைபூச மண்டபத்தினை தனியே கண்டு கண்ணீர் விட்டார், அந்த கண்ணீர் தாமிரபரணி ஆறுமட்டும் அறிந்தது
ஆம் அந்த மண்டபமே சிதம்பரனாரின் திடல், அந்த ஆற்றங்கரை பெருவெளியும் கூட்டம் கூடவும் கேட்கவும் விவாதிக்கவும் பொருத்தமான இடம்
அந்த மண்டபம் வ.உசியின் நினைவுகளில் ஒன்று
அதன்பின் சென்னை சென்ற வ உ சி வறுமையில் வாடி செத்ததெல்லாம் உலகறியும்
அந்த ஆஷ் துரையினை வாஞ்சிநாதன் இதற்குத்தான் சுட்டான், சொல்பவன் தலித் ஆதரவு என்பதால் வாஞ்சி சுட்டான் என்பதெல்லாம் திராவிட பொய்
நெல்லையின் துப்பாக்கி சூட்டுக்கும், வ.வுசியினை தரித்திரனாக்கி தனிமைபடுத்தியதற்குமே வாஞ்சிநாதனின் துப்பாக்கி தோட்டா ஆஷை பழிவாங்கியது
சுதந்திர இந்தியாவின் முதல் கலெக்டராக கொல்லபட்டான் ஆஷ், லண்டன் மறுபடி அதிர்ந்தது
ஆம் தொழிலாளர் போராட்டம் முதல் கலெக்டரை கொல்வது வரை அதிர்வு கொடுத்த பூமி அது, பாண்டியனும் கட்டபொம்மனும் அங்கு எக்காலமும் உண்டு
வ.உ.சி காந்தியின் துரோகத்தில் வாடி செத்தார்
நெடுநாள் கழித்து வ.உ.சியின் வாரிசுகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு தியாகிகளின் வாரிசு உதவி வேண்டி வரிய கோலத்தில் வந்து நின்றனர்
அவர்களை சோகத்துடன் பார்த்து கொண்டிருந்தது அந்த தைபூச மண்டபம், அந்த கொடுமையினை பார்த்தபடி சோகமாக ஓடிகொண்டிருந்தது தாமிரபரணி…
இன்றும் நெல்லை ஆற்றுபாலத்தை கடக்கும் பொழுது வ.உசியின் தியாகத்தை சொல்லியடி இடிந்து கிடக்கும் அந்த மண்டபம், வ உசி போலவே அதை கண்டுகொள்வார் யாருமில்லை
நெல்லை எழுச்சி என பிரிட்டனின் ஆவணங்களில் அச்சத்தோடு எழுதபட்ட நாள், இனி இந்தியா நமக்கல்ல என அவன் உணர்ந்த நாள்
வ உசியும் , அந்த தைபூச மண்டமும் கண்களுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள்
அந்த தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது..
ஆஷ்துரையின் கல்லறையும் தூத்துகுடியில் துறைமுகத்தின் வ.உ.சி பெயரும் இந்நாட்டில் தர்மம் மீண்டது, கொடுமை ஒழிந்தது, ஒருகாலமும் இந்நாடு இனி அடிமைபடாது, விடவும் மாட்டோம் என வருங்கால சந்ததிக்கு சொல்லிகொண்டே இருக்கும்..

Related Posts

Leave a Comment