குழந்தைகளை எப்படி வளர்ப்பது…

by Lifestyle Editor
0 comment

கொரோனாவால் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கும் குடும்பத்தினரால், சமூகத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களின் சமையல் பணிகளில் ஆண்களும் இணைந்திருக்கிறார்கள். அதனால் சமையலில் இப்போது புது ருசி கிடைத்திருக்கிறது என்று குடும்பமே மகிழ்ந்துகொண்டிருக்கிறது.

பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. ஆண்களும் இனி அந்த வேலையை செய்ய பொறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என நம்பலாம்.

பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை. தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது.

மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறை அளித்து விடுகிறார்கள். அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும்.

குழந்தைகளின் தேவை என்ன என்பது, எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாடுவதற்கான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும்.

குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகுவதன் மூலம்தான் அதற்கான அர்த்தத்தை உணர முடியும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள்’ என்று அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன.

கொரோனா தடை நீட்டிப்பு முடிவதற்குள், குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அப்பாக்களுக்கு தெரிந்து தான் ஆகவேண்டும். அதற்கும் இப்போதே தயாராகிவிடுங்கள்.

Related Posts

Leave a Comment