மது போதையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களை தட்டிக் கேட்ட தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி- அருக்காணி தம்பதி இவர்களுக்கு மேனகா என்ற திருமணமான பெண் உள்ளார். இவர் நேற்றுமுன்தினம், தனது தாய் வீட்டுக்கு தீபாவளிக்காக வந்துள்ளார்.
தெரு முனையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி மேனகா மீது போட்டுள்ளனர். இதனால் அவர் அந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ராமசாமி – அருக்காணி தம்பதி இளைஞர்களை திட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அரிவாள் வெட்டு காயங்களுடன் ராமசாமி – அருக்காணி தம்பதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி காவல் துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் இரவு தகராறில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சூர்யா,சாமிநாதன்,கிருபாசங்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.