திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்

by Lifestyle Editor
0 comment

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், இன்று கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தமிழ்கடவுள் முருகனின் 5ஆம் படைவீடான திருத்தணி கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்.

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக காலை, 10 மணிக்கு மூலவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை சுவாமி தங்கக்கசவம், திருவாபரணம், வெள்ளிக்கவசம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி மாலையில் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும் நிகழ்ச்சியும், 21ஆம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில், திருத்தணி கோயிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருத்தணி கோவிலின் துணை கோவிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோயிலிலும், 5-வது ஆண்டாக இன்று கந்தசஷ்டி விழா துவங்கியது. இதனையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடத்தப்பட்டது.

Related Posts

Leave a Comment