கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

by Lifestyle Editor
0 comment

சிட்னி:

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. ஒரு நாள், 20 ஓவர் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் டிசம்பர் 17-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனிப்பதற்காக முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். இதனால் கடைசி 3 டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல் டெஸ்ட் முடிந்ததும் கோலி நாடு திரும்ப இருப்பதால் அது நிச்சயம் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும். கோலி இல்லாததால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் ரிச்மோன்ட் கால்பந்து கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் டஸ்டின் மார்ட்டினை எடுத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போன்று தான் கோலி இல்லாத நிலைமையும்.

கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அவர்கள் மிகச்சிறந்த அணியாக உள்ளனர். அதனால் கோலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நொடி கூட நாங்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. தொடர் முழுவதும் எங்களது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். அதை செய்து காட்டுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

அனேகமாக எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இவ்வாறு சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவரது பேட்டிங்குக்காக மட்டுமின்றி விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், உத்வேகமிக்க பீல்டிங்குக்காகவும் இதை குறிப்பிடுகிறேன். களத்தில் அவர் எல்லா வகையிலும் வெளிப்படுத்தும் துடிப்புமிக்க ஆற்றலை கண்டு வியப்படைகிறேன். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக அவர் இந்தியா திரும்ப எடுத்த முடிவையும் உயர்வாக மதிக்கிறேன்.

கோலியை போன்றே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் குழந்தை பிறப்புக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டை தியாகம் செய்தார். என்னை கேட்டால், உங்களது குழந்தை பிறக்கும் அந்த பொன்னான தருணத்தை நீங்கள் வாழ்வில் ஒரு போதும் தவறவிடக்கூடாது என்பதே எந்த வீரர்களுக்கும் நான் வழங்கும் அறிவுரையாகும்.

இவ்வாறு லாங்கர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறுகையில், ‘கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி ஆடாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக விளையாடவே விரும்புகிறோம். ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோருடன் விராட் கோலியும் உலகின் சிறந்த வீரராக விளங்குகிறார். எனவே கோலி இல்லாதது ஏமாற்றமே. ஆனாலும் இந்திய அணியில் இன்னும் ‘சூப்பர் ஸ்டார்’கள் உள்ளனர்.

ரஹானே, புஜாரா திறமையானவர்கள். இன்னும் சில இளம் வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதனால் இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது. கோலி இல்லை என்பதால் நாங்கள் எளிதாக கோப்பையை வென்று விட முடியும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.

Related Posts

Leave a Comment