இந்தியாவில் 12 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடாததால் பேரச்சம்!

by Editor
0 comment

டெல்லி: கொரோனா பரவல் சூழ்நிலையால் பல நாடுகளில் தட்டம்மை (Measles) நோயை தடுக்கும் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தாத நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் 12 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்புக்கான தடுப்பூசி போடாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Progress Towards Regional Measles Elimination Worldwide 2000-2019 என்ற அறிக்கையானது உலக நாடுகளில் தட்டம்மை நோயின் கொடூர பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் உலக நாடுகளில் 8,69,770 பேருக்கு தட்டமை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 23 ஆண்டுகளில் முதல் முறையாக தட்டமைப்பு பாதிப்பு உச்சத்தை தொட்டிருந்தது. உலகளாவிய தட்டமை நோய் மரணங்களில் 50% 2016-ல் நிகழ்ந்தது. 2019-ல் தட்டம்மை நோயால் மட்டும் 2,07,500 பேர் உயிரிழந்தனர்.

தட்டம்மை நோய் தடுப்பில் MCV1, MCV2 ஆகிய தடுப்பூசிகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால் தட்டம்மை நோய் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் 12 லட்சம் குழந்தைகளுக்கு முதல் கட்ட தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை. நைஜீரியாவில் 33 லட்சம், எத்தியோப்பியாவில் 15 லட்சம், காங்கோ குடியரசுகளில் 14 லட்சம், பாகிஸ்தானில் 14 லட்சம் குழந்தைகளுக்கும் முதல் கட்ட தட்டம்மை தடுப்பூசி கிடைக்கப்பெறவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் தட்டம்மை நோயை தடுத்து விட முடியும். உரிய காலத்தில் தட்டம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டால் இதனால் ஏற்படும் மரணங்களையும் தவிர்க்க முடியும். இதனால் உலகின் பல நாடுகளும் கொரோனா நடவடிக்கைகளுக்கு மத்தியில் தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் கூறுகையில், தட்டம்மை நோய் பாதிப்பு மற்றும் மரணங்களை தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு அறிந்து வைத்துள்ளது. தற்போதைய புள்ளி விவரங்களானது உலகின் பல நாடுகள் குழந்தைகளை தட்டம்மை நோயில் இருந்து பாதுகாக்க தவறிவிட்டதையே வெளிப்படுத்துகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த நிலைமையை மாற்ற முடியும் என்கிறார்.

Related Posts

Leave a Comment