சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் சண்டை நடந்து வந்தது.
இந்த விவகாரத்தில் ரஷியா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்களும் தோல்வியில் முடிந்தன. அதன் பின்னர் அமெரிக்காவின் முயற்சியில் உருவான போர் நிறுத்தமும் தோல்வியை கண்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ரஷ்யா மீண்டும் தலையிட்டு இரு நாடுகளையும் சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டியது. அதன் பலனாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் , அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோருக்கு இடையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் முழுமையான மற்றும் உறுதியான சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அதனை தொடர்ந்து நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அனைத்து விரோத நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அசர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
இதற்கிடையில் அசர்பைஜான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அர்மீனியா மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் யெரெவனில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.