குழந்தை குருவாயூரப்பன்!

by Editor
0 comment

பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் சொல்லப்படும், குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அற்புதமான கோயில் குருவாயூர்.

கேரளவாசிகள் தமது உணர்வு, உயிருடன் கலந்த நண்பனாக, நலம் விரும்பியாக, குருவாக, தெய்வமாக பார்க்கும் கடவுள் ஸ்ரீ குருவாயூரப்பன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோயில் உலகப் பிரசித்திப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ குருவாயூரப்பனாக நின்றகோலத்தில், இக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

குழந்தை குருவாயூரப்பன் விக்கிரகத்துக்கு மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலை மோதும். பேரானந்தத்தையும் தரும் தரிசனம் அது. .

இத்தல கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும் சுதர்சன சக்கரத்தையும் கௌமோதகி எனப்படும் கதையையும் தாமரை மலரையும் ஏந்தி குழந்தை வடிவில் திருவருள் புரிகிறான். இக்கண்ணனை பக்தர்கள் உண்ணிக்கண்ணன், உண்ணிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் அழைத்து பரவசமடைகின்றனர். நாராயண பட்டத்ரியின் நோய் தீர்த்த இக்குழந்தை கண்ணன் நாராயணீய பாராயணத்தினால் தம் பக்தர்களின் நோயை தீர்க்கிறான்.

எவ்வளவு தொலைவிலிருந்தாலும் பிரகாசமான வடிவில் ஜொலிக்கும் குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும். சர்வாலங்காரங்களுடன் தலையில் கிரீடம், கழுத்தில் மரகதம், இடுப்பில் சிவப்புப் பட்டு கௌபீனம் தரித்து குருவாயூரப்பன் அருட்கோலம் காட்டுவார். நைவேத்தியமாக நெய்யப்பம், இலை அடை, பால் பிரதமன் போன்றவை குருவாயூரப்பனுக்கு படைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோயில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும், இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் ஆகும்.

குருவாயூரப்பன் அருளால் திருமணம் கைகூடப் பெற்றவர்கள் இத்தலத்திலேயே திருமண வைபவத்தை நடத்துகின்றனர். இதன் மூலம் மணமக்களுக்கு நீண்ட வாழ் நாளும் மணமகளுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் அமையும் என்று நம்புகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தையே தெய்வ வடிவமாக இருக்கும் இத்தலத்தில், குழந்தைக்கு முதன் முதலில் சோறூட்டுவது சிறப்பான வைபவம் ஆகும்.

Related Posts

Leave a Comment