’கோல்ப்’ விளையாடிய டிரம்ப்

by Editor
0 comment

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். அதேபோல், துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ்சும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டுவந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் நேற்று (இந்திய நேரப்படி இரவு 10) எண்ணப்பட்டன. அதில் இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 290 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இந்நிலையில், உலகமே நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவது யார் என தொலைக்காட்சி, இணையதளத்தில் குவிந்திருந்த நிலையில் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் எங்கு இருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் சிறிது நேரத்திற்கு முன்னதாக திட்டமிடப்படாத பயணமாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.

அவர் வெர்ஜினியா மாநிலத்தின் ஸ்டெர்லின் பகுதியில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ப் மைதானத்திற்கு சென்றுள்ளார். பென்சில்வேனியா வாக்குஎண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அவர் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார்.

அவர் வழக்கமாக பயன்படுத்தும், ‘மேக் அமெரிக்கா கிரேட் அகேன்’ என்ற வாசகம் அடங்கிய தொப்பியை அவர் தனது தலையில் வைத்துக்கொண்டு கோல்ப் விளையாடினார்.

கோல்ப் விளையாடி முடித்த உடன் வெள்ளைமாளிகை நோக்கி வந்த டிரம்பிற்கு அவரது ஆதரவாளர்கள் ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என கோஷமிட்டனர். அதேபோல் ஜோ பைடன் ஆதரவாளர்களோ டிரம்பை நோக்கி ‘தோல்வியாளர்’ என கோஷமிட்டனர்.

Related Posts

Leave a Comment