கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

by Lankan Editor
0 comment

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 15 முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் நேற்று முன்தினம் (05) உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயால் பீடிக்கப்பட்டு கொழும்பு ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 400 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர். பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,970 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 563 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7186 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 5754 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 196 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட கைதிகள் 23 பேரும், வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், கொரோனா தொற்று மூன்றாம் கட்டம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment