விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்: தந்தை சந்திரசேகர் பரபரப்பு பேட்டி

by Web Team
0 comment

விஜய் என் மீது நடவடிக்கை எடுத்து ஜெயிலுக்கு அனுப்பட்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கியிருகிறார்.

இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் அதிரடியாக தெரிவித்தார். இதனால் தந்தை -மகன் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து விஜயின் தாய் சோபா கூறுகையில், நான் எஸ்ஏசி தொடங்கியுள்ள கட்சியில் இல்லை. அவர் என்னிடம் எதையும் சொல்லாமல் என்னிடம் கையெழுத்து வாங்கி என்னை பொருளாளராக நியமித்துள்ளார். அதனால் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். விஜய்யும் அவரது தந்தையும் சரியாக பேசிக் கொள்வது கிடையாது என்று கூறினார்.

இந்நிலையில் இயக்குநரும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியதாவது –

“நான் என் மகனுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று 1993ல் அவருக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன்.

தற்போது அவர் உச்ச நட்சத்திரமாகி இருக்கிறார். அவரை நான் இன்னமும் குழந்தையாகவே நினைக்கிறேன்.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் விஜய்க்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அதை நான் அவரது நல்லதாகவே செய்தேன். அதை அவர் விரைவில் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.

தனது ரசிகர்களை நான் தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்பா அவரது நல்லதுக்குதான் செய்தார் என்பதை அவர் புரிந்து கொள்வார்.

அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். நான் பொதுவாகவே விஜயிடம் ஆறு மாதத்திற்கு , மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் பேசுவேன். தற்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்காது.

எனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதுபோல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதை வரலாறு தானே.

விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் கட்சியை அரசியல் கட்சியாக மாற்றினேன்.

எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் கிடையாது என்றால் விலகிக் கொள்ளட்டும். அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை எழும். அது சாதாரணமானதுதான். விஜய் தான் என் கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்றும் கிடையாது. விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியிருக்கிறார்.

அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment