அனைத்து கடவுள்களும் வாசம் செய்யும் காமாட்சி விளக்கின் மகிமைகள்!

by Web Team
0 comment

இருளை நீக்கி ஒளியை தரக்கூடிய தீபத்தை ஏற்றி வழிபடுபதே நம் மரபு. அப்படி, தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபடும் விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பல விதங்களில் கிடைக்கிறது. இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாக வீடுகளில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. நம் மரபோடு ஒன்றிணைந்த இந்த விளக்கு இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இவ்வளவு மகிமைவாய்ந்த மங்கள காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்? என்பதை பார்க்கலாம்.

இவ்வுலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவள் காமாட்சி அம்மன். அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சிக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி தாயை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன்கள் கிடைத்துவிடும்.

காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், குலம் காக்கும் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய முழு அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல், கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள், கஷ்டத்தை போக்கும், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபட்டாலே போதும். நம் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை. காமாட்சி அம்மனின் முதல் எழுத்தான `கா’ என்பதற்கு விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. காமாட்சி’ என்ற சொல்லுக்கு, ‘கருணையும், அன்பும் நிறைந்த கண்களை கொண்டவள்’ என்பது பொருள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன். காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. காமாட்சி தீபத்தை ஏற்றி வீட்டில் வழிப்பட்டால் நம் விருப்பங்களையும், வறுமையையும், குடும்ப ஒற்றுமையையும் தருவாள் காமாட்சி.

அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சடங்குகளில், மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி, புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, “நிறைநாழி” எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபத்தை ஏற்றி வணங்கிய பிறகே வீட்டுக்குள் வருவார்கள். கல்யாண சீர்வரிசைகளை தரும் போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

காமாட்சி விளக்கு மிகவும் புனிதமானது. மங்களப் பொருட்களில் காமாட்சி விளக்குக்கு முதலிடம். இதில், அஷ்டலட்சுமிகளில் ஒருவரான கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.

சிலரது வீட்டில் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கு, இந்த காமாட்சி அம்மன் விளக்கு.

-வித்யா ராஜா

Related Posts

Leave a Comment