‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’

by Editor
0 comment

அபுதாபி:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment