கொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா

by Web Team
0 comment

ஐபிஎல் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்கும் இது 13-வது ஆட்டமாகும்.

4 போட்டிகளில் மட்டுமே வெற்ற பெற்று பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்த சிஎஸ்கே பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறவும், மற்ற அணிகளின் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு வேட்டு வைப்பதும்தான் தற்போது சென்னையின் வேலையாக இருக்கும். மற்றபடி வெற்றி எந்த வகையிலும் உதவாது.

சென்னை அணி வெற்றி பெற்றால் கொல்கத்தாவின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு பெரிய ஆபத்து ஏற்படும்.

பிளே-ஆஃப்ஸ் சுற்று தகுதியை இழந்த பின்னர் அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து 12-வது போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் சென்னை பந்து வீசியபோது இதுவரை பவர்பிளேயில் மட்டுமே தீபக் சாஹர் மற்றும் சாம் கர்ரனை பயன்படுத்தி வந்த டோனி இந்த முறை தனது யுக்தியை மாற்றி தலா இரண்டு ஓவர்களுடன் நிறுத்திக் கொண்டு டெத் ஓவரில் பயன்படுத்தினார். இதற்கு இறுதியில் நல்ல ரிசல்ட் கிடைத்தது.

மிடில் ஓவர்களில் ஜடேஜா (20 ரன்), இம்ரான் தாஹிர் (30) ரன், சான்ட்னெர் (23 ரன், ஒரு விக்கெட்) சரியான வகையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் 16 ஓவரில் ஆர்சிபி-யால் 116 ரன்களே அடிக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணமாக டு பிளிஸ்சிஸை சொல்லலாம். பந்து எந்த திசையில் சென்றாலும் அங்கு அவர்தான் இருந்தார். சான்னெர் பந்தில் படிக்கல்லை பவுண்டரில் லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து கெய்க்வாட் இடம் பந்தை வீசி அவுட்டாக்க காரணமாக இருந்தார்.

18-வது ஓவரில் சாஹர் டி வில்லியர்ஸை வெளியேற்ற, சுட்டிப்பையன் சாம் கர்ரன் 19-வது ஓவரில் மொயீன் அலி, விராட் கோலியை அவுட்டாக்க ஆர்சிபி-யின் வேகம் குறைந்தது. கடைசி ஓவரில் சாஹர் மோரிஸை அவுட்டாக்க ஆர்சிபி-ஐ 145 ரன்னுக்குள் சுருட்டியது.

டெத் ஓவரான கடைசி நான்கு ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தியது சிஎஸ்கே-வுக்கு சாதகமாக அமைந்தது.

146 ரன்கள் எடுக்குமா? என்ற சின்ன சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் என்னிடமா ஸ்பார்க் இல்லை? என்று கேட்பது போல அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். டு பிளிஸ்சிஸ் (25) ஏமாற்றினாலும், அம்பதி ராயுடு (27 பந்தில் 39 ரன்) ஒத்துழைப்பு கொடுக்க ருதுராஜ் 65 ரன்கள் விளாசி 6 பந்து மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

சாம் கர்ரன், ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதுடன் சென்னை கொல்கத்தாவை எதிர்கொள்ளும்.

ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன்னில் தோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிஎஸ்கே களம் இறங்கும். கடந்த போட்யில் விளையாடிய பிராவோ, கரண் சர்மா, ஷர்துல் தாகூர், வாட்சன், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இல்லை. இதனால் அந்த பேட்டியை ஒப்பிட முடியாது.

கொல்கத்தா வெற்றி பெற்றேயாக வேண்டும் என நோக்கத்தில் களம் இறங்கும். ஏற்கனவே சென்னையை வீழ்த்தியுள்ளதால் அந்த நம்பிக்கையில் களம் இறங்கும்.

கொல்கத்தா அணியின் ஒரே பிரச்சினை சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். கடைசி ஐந்து போட்டிகளில் (தோல்வி, வெற்றி, தோல்வி, வெற்றி, தோல்வி) என ரிசல்ட் வந்துள்ளது.

தொடக்க வீரர் ஷுப்மான் கில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இருந்தாலும் சென்னைக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது அவசியம். நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி என இரண்டு பவர் ஹிட்டரை வைத்துள்ளது. ஒருவர் ஸ்பார்க் ஆனாலும் சென்னை காலி.

அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், மோர்கன் ஒரே நேரத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். சுனில் நரைன் அடித்தால் லாபம், இல்லை என்றால் இல்லைதான்.

பந்து வீச்சில் லூக்கி பெர்குசன், பேட் கம்மின்ஸ், மிஸ்டிரி ஸ்பின்னர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். கொல்கத்தா வீரர்கள் அதிக ரன்கள் குவித்தால் இவர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். மேலும் பவுலர்களை மோர்கன் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே எதிரணியை பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள்.

இதனால் கொல்கத்தா எவ்வளவு ரன்கள் குவிக்கிறதோ? அதை பொறுத்தே இவர்களின் பந்து வீச்சும் அமையும். வெற்றியும் அமையும்.

Related Posts

Leave a Comment