மொட்டை மாடியில் செடி வளர்த்தால் அது கட்டிடத்தை பாதிக்குமா? கட்டிட வேலை செய்பவரின் அனுபவம்!

by Web Team
0 comment

வெளிநாடுகளில் மாடி தோட்டம் மூலம் விவசாயம் செய்யலாம் என்கிறார்கள் அதெல்லாம் சாத்தியமா? விவசாயம் செய்யும் அளவிற்கு இல்லாவிடினும், ’36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா, அன்றாடம் சமையலுக்கு தேவையான காய்கறிகளை அவரது வீட்டு மாடி தோட்டத்திலே விளைவிப்பார். அது மாதிரியாவது முயற்சி எடுக்கலாம் என பார்த்தால், மாடி தோட்டம் போடலாம் என வாய் திறந்த உடனே வீட்டில் உள்ளவர்கள் கான்கிரீட் தாங்காது, விரிசல் ஏற்பட்டு விடும். இந்த காலத்தில் வீடு கட்டுவது சாதாரண விஷயமா, செலவு வச்சுடாத என வைய ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி, கான்கிரீட் வேலை செய்பவர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர் பகிர்ந்து கொண்ட அனுபவம். சரியான முன் ஏற்பாடு இன்றி மாடி தோட்டம் அல்லது தொட்டி செடிகள் வைத்தால் செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் கான்கிரீட்டுக்குள் இறங்கி சில மாதங்களிலே ஓதம் தட்ட ஆரம்பித்துவிடுமாம். வருட கணக்கில் அப்படியே விட்டால், உட்புற சுவர் அதாவது மேற்கூரை ஏடு ஏடாக கீழே உதிர்ந்து, பெரிய செலவு வைத்துவிடும் என கூறினார்.

ஆனால் சரியான முன் ஏற்பாடுகள் மூலம் மாடித்தோட்டம் சாத்தியமாம். கட்டிடத்தின் வலிமை, நீர் வடியும் வசதி, எந்த மாதிரியான செடிகள் வளர்க்க போகிறோம் என்பதன் அடிப்படையில் மாடி தோட்டம் அமைக்கலாம்.

மேற்கூரையானது weather proofing எனும் தட்ப வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்ட கலவையால் மூடப்பட்டு இருக்க வேண்டும். கான்கிரீட் கூரையின் மேல், ஐந்து கிலோ எடையளவில் மண் பரப்ப வேண்டும். நீர் கசிந்தால் அதிக பட்சம் மேலே உள்ள ஒரு கிலோ அளவு மண்ணால் உறிஞ்சி கொள்ளப்படும். இதற்கு முன்னதாக மாடி தரையை பிளாஸ்டிக் கொண்டு பரப்பிய பின்னர் மண்ணை சமன் செய்ய வேண்டும். பலத்த மழை பெய்யும் போது மண் கரைந்து ஓடாமல் அங்கேயே தேங்கியிருக்கும்படி முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதே போல ஒரு நாள்விட்டு ஒருநாள் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் தினமும் ஊற்ற கூடாது. வாரம் ஒருமுறையாவது பரப்பிய மண்ணை கொத்திவிட வேண்டும். சிலர் பைகளில் செடிகளை வளர்ப்பார்கள். மாடி தோட்டத்திற்கு இது ஒத்து வராது. பலருக்கு மாடி தோட்டம் அமைக்க ஆசை இருக்கும் ஆனால் அதைப்பற்றி தெளிவு இல்லாததால் அந்த முயற்சியை தவிர்த்து விடுவார்கள். இந்த காலத்தில் எல்லாமே கலப்படம், பூச்சி மருந்து அடிக்காத காய்கறிகளை உண்பது அரிதாக உள்ளது.

கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முன் ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு செய்தால் மாடி தோட்டம் சாத்தியமே! பின்னர் இது குறித்து நீங்க நாலு பேருக்கு அறிவுரை செய்யலாம்.

Related Posts

Leave a Comment