பெண் கொடுமை

by Lifestyle Editor
0 comment

பெண்களின் பாதுகாப்புக்காக பலவித சட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அரசின் ஆய்வறிக்கையும் அதனை உறுதிபடுத்துகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் ‘இந்தியாவில் குற்றங்கள்-2019’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2018-2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் தினமும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதுவே 2018-ம் ஆண்டில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகளாக இருந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில் அதிபட்சமாக உத்தரபிரதேசத்தில் 59,853 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது நாடு முழுவதும் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதமாகும்.

குற்ற வழக்குகள் மட்டுமின்றி கற்பழிப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2018-ம் ஆண்டு 33,356 கற்பழிப்பு வழக்குகளும், 2019-ம் ஆண்டு 32,033 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் கற்பழிப்பு வழக்குகள் (5,997) பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 3,065 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2,485 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களும் அதிகரித்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 7,444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (6,402 வழக்குகள்), மத்தியபிரதேசத்தில் (6,053) பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் பெரும் பான்மையானவை கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல் (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல் (21.8 சதவீதம்), கடத்தல் (17.9 சதவீதம்) போன்று குற்றச்செயல்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Related Posts

Leave a Comment