மாதுளை

by Web Team
0 comment

மாதுளை – உலகின் தொன்மையான பழங்களுள் ஒன்று. இந்தக் கனிக்குள் முத்து முத்தாக பல நூற்றாண்டு வரலாறு புதைந்திருக்கிறது. கிரேக்கப் புராணங்களின்படி, வசந்தகாலம், குளிர்காலம் எப்படி வந்தது என்று விளக்குவதற்கு மாதுளை முத்துகளை வைத்துச் சொல்லப்படும் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.

டிமிடர் – விவசாயம் மற்றும் அறுவடைக்கான கிரேக்கப் பெண் கடவுள். டிமிடரின் அழகான மகள், பெர்ஸபோன். டிமிடருக்கு தன் மகள் மேல் பாசம் அதிகம். டிமிடர் சிரித்தால், மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே பூமியில் பூக்கள் பூக்கும், கனிகள் காய்க்கும், பயிர்கள் விளையும். அதனால், டிமிடரின் சந்தோஷம் மிக முக்கியம் என்பதில் அவளது பாசக்கார அண்ணனான ஜீயஸ் (Zeus) கவனமாக இருந்தார். ஜீயஸ்தான் கிரேக்கக் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

ஹேட்ஸ் என்பவர் பாதாள உலகின் கடவுள். இருள்சூழ்ந்த பாதாள உலகில் மாட்டிக்கொண்ட ஒருவர், பசி தாளாமல் அங்கே இருக்கும் எதையாவது எடுத்துச் சாப்பிட்டுவிட்டால் ஹேட்ஸின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஒருமுறை ஹேட்ஸ், மூன்று நாய்கள் பூட்டிய தன்னுடைய தேரில் பூமிக்கு வந்தார். அது ஒரு தோட்டம். அங்கே பெர்ஸபோன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுடைய வசீகரத்தைப் பார்த்ததுமே ஹேட்ஸுக்கு காதல் பொங்கியது. யோசிக்கவே இல்லை. அவளைத் தூக்கித் தன்னுடைய தேரில் போட்டார். பாதாள உலகத்துக்கு விரைந்தார்.

சகல வசதிகளும் நிரம்பிய பாதாள உலக அரண்மனையில், ஒரு சொகுசு அறையில் பெர்ஸபோன் அடைத்து வைக்கப்பட்டாள். அவள் முன்பு விதவிதமான, சுண்டி இழுக்கும் உணவுகள் வைக்கப்பட்டன. ஆனால், எதையாவது சாப்பிட்டுவிட்டால், ஹேட்ஸிடம் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கவே முடியாது அல்லவா… பெர்ஸபோன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

பூமியில், டிமிடர் தன்னுடைய செல்ல மகளைக் காணவில்லை என்று பதறினாள். அழுதுகொண்டே இருந்தாள். தனது கடமைகள் அத்தனையையும் மறந்தாள். எனவே, பூமியில் பயிர்கள் எல்லாம் வாடின. பஞ்சம் தலைவிரித்து ஆடியது. ஹேட்ஸ்தான் பெர்ஸபோனைக் கடத்திக்கொண்டு போயிருக்கிறார் என்ற விஷயம் ஜீயஸுக்குத் தெரியவந்தது. ஜீயஸ், தன் மகனான ஹெர்மெஸை ஹேட்ஸிடம் தூது அனுப்பினார்.

இடைப்பட்ட காலத்தில் பெர்ஸபோனால் பசி தாங்க முடியவில்லை. தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு மாதுளையை எடுத்தாள். உரித்தாள். அதிலிருந்து ஆறே ஆறு முத்துகளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டாள். தூது வந்த ஹெர்மெஸிடம், ஹேட்ஸ் பேரம் பேசினார். ‘நான் பெர்ஸபோனைப் பாதாள உலகின் ராணியாக்கப் போகிறேன். அவள் இங்கே ஆறு மாதுளை முத்துகளைச் சாப்பிட்டுவிட்டாள். அதனால் வருடத்தில் ஆறு மாதங்கள், இங்கே அவள் பாதாள உலகின் ராணியாக இருக்கட்டும். மீதி ஆறு மாதங்கள் பூமியில் இருக்கலாம். இதற்குச் சம்மதமென்றால் அவளை விடுவிக்கிறேன்’ என்றார். வேறு வழியில்லாமல் ஹெர்மெஸும் அதற்குச் சம்மதித்தார். பெர்ஸபோனுக்கு அப்போது விடுதலை கிடைத்தது. டிமிடர் சந்தோஷப்பட, பூமி மீண்டும் செழித்தது.

ஆக, பெர்ஸபோன் பாதாள உலகில் இருக்கும் ஆறு மாதம் குளிர்காலம், பூமியில் இருக்கும் ஆறு மாதம் வசந்த காலம் என்று மாறியது என்கிறது கிரேக்க புராணம். சரி, வரலாற்றுக்கு வருவோம்.

சுமார் 8,000 ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்டது மாதுளை. உலகில் தோன்றிய பெரும்பான்மை யான நாகரிகங்களில் மாதுளையின் பங்கும் இருக்கிறது என்று சொல்லலாம். Neolithic Age என்று சொல்லப்படும் கி.மு 6000 காலத்தைச் சேர்ந்த மாதுளையின் படிமங்கள், கிரேக்கப் பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. ஆக, உலகில் பயிரிடப்பட்ட ஆதி கனிகளுள் மாதுளையும் ஒன்று என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

தாவரவியலாளர்களின் கருத்துபடி மாதுளையின் பூர்வீகம் பாரசீகம். பாரசீக மொழியில் மாதுளையின் பழைய பெயர் Dulim. இதில் இருந்தே மாதுளைக்கான சம்ஸ்கிருதச் சொல்லான Dhalimba வந்திருக்கலாம் என்கிறார்கள். இமயமலையின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே மாதுளை விளைந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஹரப்பாவின் அகழ்வாராய்ச்சி களின்படி, கி.மு 2000 காலத்திலேயே அங்கே மாதுளை விளைந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மகாபாரதத்தில், சமைக்கப்பட்ட இறைச்சியின் மேல் அழகுபடுத்த மாதுளை முத்துகள் தூவப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கி.மு 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆயுர்வேதத்தின் தந்தையான சரகர், இரண்டு வகை மாதுளைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இனிமையான மாதுளைச் சாற்றின் பலன்கள் குறித்தும் எழுதியிருக்கிறார்.

பண்டைய எகிப்தியர்கள் மாதுளையை மதிப்பு மிக்க உணவாகக் கருதியிருக்கிறார்கள். `பாரோ’ என்றழைக்கப்பட்ட எகிப்திய மன்னர்களுக்காக, தோட்டங்களில் தனியாக மாதுளை பயிரிடப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் Schedou என்ற பெயரில் மாதுளைச் சாற்றை வயிற்றுவலிக்கான மருந்தாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மாதுளையைச் சிவப்பு சாயம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். பண்டைய எகிப்திய ஓவியங்களில் மாதுளையைக் காணலாம். அதேபோல எகிப்திய மன்னர்களைப் பிரமிடுகளில் புதைக்கும்போது வைக்கப்பட்ட பழ வகைகளில் மாதுளை இருந்திருக்கிறது.

மாதுளை, பண்டைய நகரமான கார்த்தேஜ் வழியாக ரோமுக்கு கி.மு 7-ம் நூற்றாண்டில் பரவியது. ரோமானியர்கள் வீட்டின் வாசலில் அழகு செடியாகவும் வளர்த்திருக்கிறார்கள். கோடைக்காலத்தில் தாகம் தணிக்கும் பழமாக மாதுளை இருந்தது. பண்டைய ரோமில் திருமணமான பெண்கள், கிளை ஒன்றில் மாதுளை தொங்குவது போன்ற வடிவத்தில் ஆபரணத்தைத் தங்கள் தலையில் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

கி.மு 5-ம் நூற்றாண்டில் புத்தர், பிந்துசாரர் ராஜ்ஜியத்தில் தங்கியிருந்தபோது, பலரும் அவரை தரிசிக்க வந்தார்கள். பல பரிசுகளை அவர் முன்வைத்தார்கள். புத்தர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு மூதாட்டி நீண்ட தூரம் பயணம் செய்து புத்தரிடம் வந்தாள். ஒரு சிறிய மாதுளையை அவருக்குப் பரிசாகக் கொடுத்தாள். புத்தர், அதை அன்புடன் ஏற்றுக்கொண்டு புசித்தார். ஆக, புத்த மதம் கொண்டாடும் புனிதக் கனியாக மாதுளை விளங்குகிறது.

கி.மு 138 – 125-க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவுக்குப் பட்டுப்பாதை வழியாக வந்த பாரசீக வணிகர்கள் மூலமாக மாதுளை அங்கே பரவியது. ‘இனிக்கும் இந்த பழங்கள் எங்கும் எங்கெங்கும் விளைகின்றன’ என்று கி.பி 7-ம் நூற்றாண்டில் யுவான் சுவாங் தன் பயணக்குறிப்பில் மாதுளை குறித்து எழுதியிருக்கிறார். கி.பி 15-ம் நூற்றாண்டுப் பயணியான மொரோக்காவின் இபின் பதூதா வும் மாதுளைக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார்.

‘சொர்க்கத்திலிருந்து நேரடியாக வந்த கனி மாதுளை’ என்று இஸ்லாம் இதைக் கொண் டாடுகிறது. மாதுளம்பழத்தின் கீழ் முனை கீரிடம் போன்ற அமைப்பில் இருந்த தால், ஐரோப்பியர்கள் இதை ‘ராயல் ஃப்ரூட்’ என்று அழைத்தார்கள்.

Related Posts

Leave a Comment