திருமந்திரம் ( பாகம் 40 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 40)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வினையால் விளைவது நன்மையும் தீமையும்

“இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையி னாலே முடிந்தது

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே”     பாடல் எண் 267

உலக வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டு இருப்பது அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறவியில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள் அறச் சிந்தனை அற்றவர்களே.

பிறர் இன்பம் கெட நினையாதீர்

கெடுவது(ம்) ஆவதுங் கேடில் புகழோன்

நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்

இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்

படுவது செய்யிற் பசுவது வாமே”                                பாடல் எண் 268

அழிவு, ஆக்கம் இரண்டையும் அருளிச் செய்பவன், குன்றாத புகழுடைப் பரம்பொருளான சிவபெருமான். நடுவு நிலை தவறித் தீமை செய்பவர்கள் இன்பம் அடைய அவன் ஒருபோதும் விடமாட்டான். எனவே உரியவர்களுக்கு ஒன்றைத் தரவும், இல்லாதவர்க்கு இயன்றதைக் கொடுத்துதவவும் நினையுங்கள். மற்றவர் இன்பத்தைக் கெடுக்காதீர்கள். பிறர் இன்பம் கெட நினைப்பவன் மனிதனல்ல.

புல்லறிவாளரைப் புகழாதீர்

“செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்

புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்

இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்

வில்லி இலக்கெய்த விற்குறி யாமே”                            பாடல் எண் 269

பண வசதி படைத்தவர்கள் வாழ்வில் சிலராகவோ, பலராகவோ இருக்கலாம். பணவசதி படைத்தவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக அவர்களை அறிவுடைய பெரியோர்கள் என்று எண்ணுவது தவறு. இப்படிப்பட்ட அறிவற்ற மூடர்களைப் போற்றிப் புகழ்ந்து, வீணே வாடி மெலிந்து, நலிந்து வருந்தாமல், பேரின்ப வீடு தரவல்ல இறைவனை எண்ணித் துதியுங்கள், இப்படிச் செய்வது, வேடன் வில்லில் அம்பைப் பொருத்தி, வைத்த குறி தப்பாது, இலக்கைச் சென்று தாக்குவது போல , நீங்களும் உங்களுடைய இலட்சியத்தை அடைய உதவும்.

அன்புடைமை

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”                                                         பாடல் எண் 270

இப்பாடலின் பொருள் “அன்பு வேறு,  இறைவன் வேறு இரண்டும் ஒன்றல்ல தனித்தனியானவை என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே இறைவன் என்பதைப் பலரும் அறியாது இருக்கிறார்கள். அன்புதான் இறைவன் என்பதை எல்லாரும் அறிந்துவிட்டால் பிறகு அவர்களே அன்புருவான இறைவனாய் ஆனந்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பார்கள் (வாழ்ந்திருப்பார்கள்).”  என்பதாகும்.

பின்னிப் பிணைக பேரருளுடன்

“பொன்னைக் கடத்திலங் கும்புலித் தோலினன்

மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

துன்னிக் கிடந்த சுடுபொடி ஆடிக்குப்

பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே”                            பாடல் எண் 271

பொன்னைவிடச் சிறப்பாக ஒளிவிடும் புலித்தோலை ஆடையாக அணிந்தவன், மின்னலைப் போல ஒளிவீசித் திகழும் இளம்பிறைச் சந்திரன் பொருந்திய சடைமுடியோடு கூடியவன், வெண்ணீறு பூசி அம்பலத்தில் ஆனந்தக் கூத்திடும் பரம்பொருள் எம்பிரான். அப்பெருமானிடம் நான் கொண்ட அன்பு இரண்டறக் கலந்தது. பின்னிப் பிணைந்தது. பிரிக்க முடியாதது.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மணி

“என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போ(டு) உருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண் ணாதே”                     பாடல் எண் 272

தன் உடல் எலும்புகளையே விறகாகக் கொண்டு, உடல் தசைகளை எல்லாம் அறுத்துப் போட்டுப், பொன்னிறம் தோன்ற நெருப்பில் நன்றாக வறுத்து வதக்கினாலும், அன்போடு மனம் ஊருகி, உள்ளம் குழையத் தொழுது வணங்ங்குபவர்களுக்கே அல்லாது, மற்றவர்களுக்கு என்னைப் போல இறையருள் பெற இயலாது. அதாவது உடல் வருந்த முயற்சி செய்தாலும், உள்ளத்தில் அன்பு கொண்டு, பக்தி செலுத்தி, மனம் உருகிப் பணிந்து தொழுபவர்களுக்கே பரமன் வசப்படுவான்.

ஆர்வ முடையார் அவனருள் பெறுவார்

“ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

ஈரம் உடையவர் காண்பர் இணையடி

பாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்குபுக் காரே”                             பாடல் எண் 273

சிவப் பரம்பொருளை அடையவேண்டும் என்கின்ற பேரன்பு, ஆசை, சலிப்பில்லாத முயற்சி உடையவர்கள் அவனைக் காணப் பெறுவர். மனதில் இரக்கம், அன்பு கொண்டவர் அவன் திருவடிகளைக் காணும் பேறு பெறுவர். இரண்டும் இல்லாது துன்பச் சுமையை, துயர வினைகளைத் தொடர்ந்து சும்ப்பவர்கள் காண்பது இந்த உலகத்து, அதில் தொடரும் பிறப்பையும், இறப்பையுமே. இவர்கள் அன்பில்லாத துன்ப வழிச் சென்று, துயரக் காட்டில் தவிப்பர்.

Related Posts

Leave a Comment