மோடி – ட்ரம்ப் நட்பு அவ்வளவுதானா? இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் ட்ரம்ப்

by Web Team
0 comment

ஆனால் சம காலத்தில் வாழ்ந்த தலைவர்களிடையே இத்தகைய ஒற்றுமைகளை பார்ப்பது அரிது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவ்வாறு பல்வேறு ஒற்றுமைகள் வரையறுக்கப்படுகின்றன.

மோடி தன்னுடைய நண்பர் என ட்ரம்ப்பும், ட்ரம்ப்பை தன்னுடைய நண்பர் என மோடியும் மெச்சிக்கொள்ள தவிர்த்ததே இல்லை.

ஹௌடி மோடி நிகழ்விற்காக அமெரிக்கா சென்றபோது ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார் என ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் பிரதமர் மோடி.

மோடியின் அதே அமெரிக்க வருகையின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் ‘மோடி இந்தியாவுக்கு தேச தந்தையைப் போன்றவர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் எங்கு சந்தித்து கொண்டாலும் அளவளாவி கொள்ள தவறியதில்லை. மோடி ஆட்சி காலத்தில் தான் இந்தியா – அமெரிக்கா இடையே நல்ல உறவு இருப்பதாக பாஜக கூறிவருகிறது. அதற்கு மோடி – ட்ரம்ப்பின் தனிப்பட்ட நட்பும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் ட்ரம்ப் உண்மையில் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்.? சில உதாரணங்களை எடுத்துக் கொண்டாலும் நமக்கு உண்மை விளங்கும்.

கொரோனா பேரிடர் காலத்தில் Hydroxychloroquine (HCQ) மருந்து சிகிச்சைக்கு பயன்படும் என்பதால் இந்திய அரசு அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.

இந்தியாவில் தான் HCQ அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய ட்ரம்ப் இந்தியா HCQ ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என நம்புகிறோம், இல்லையென்றால் அமெரிக்காவின் தடைகளை சந்திக்க நேரிடும் என வெளிப்படையாக எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு HCQ ஏற்றுமதி மீதான தடையை தளர்த்தியது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தே இதைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் தடை தளர்த்தப்பட்டது என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் விவாதத்தில் இரண்டு முறை இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவோடு ஒப்பிட்டு பேசினார் ட்ரம்ப்.

ஜோ பைடன் உடனான முதல் விவாதத்தில் ட்ரம்ப் கொரோனாவை கையாண்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா கொரோனா இறப்பு பற்றி முழுமையான நேர்மையான தரவுகளை வழங்குவதில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது விவாதத்தில் காலநிலை மாற்றம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ட்ரம்ப் காலநிலை மாற்றத்தை ஆரம்பம் முதலே நிராகரித்து வருபவர். இந்த கேள்விக்கு ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் காற்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. நேரடியாக Filthy என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

ரஷ்யா உடன் அமெரிக்காவுக்கு நீண்ட கால பகை உண்டு. தற்போது சீனா உடன் புதிய வர்த்தக, பனிப்போரில் அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால் இந்தியா உடன் அமெரிக்காவுக்கு சுமூகமான உறவே இருந்து வந்துள்ளது.

அதிலும் தற்போது சீனா உடனான மோதலுக்குப் பிறகு இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சமயத்தில் ட்ரம்ப் இந்தியாவை ரஷ்யா, சீனா உடன் ஒப்பிடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குடியேறிகள் மீது ட்ரம்ப் என்றுமே எதிர்மறையான பார்வையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் நிர்வாகத்தின் ஹச்1பி விசா தடை மற்றும் கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிப்படைவது இந்தியர்களே. உண்மையில் ட்ரம்ப் இந்தியாவை எந்த அளவிற்கு மதிப்புடன் பார்க்கிறார் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Posts

Leave a Comment