சர்வம் சக்தி மயம் என்பதைச் சொல்லும் நவராத்திரி!

by Web Team
0 comment

பண்டிகைகளின் தொடக்கமான நவராத்திரிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்தாண்டு தாமதமாக ஒரு மாதம் கழித்து வருகிறது. மேலும், கொரோனா கொடிய நோயால் இந்த பண்டிகைக்கான உற்சாகம் மக்களிடையே வழக்கத்தைவிட குறைந்தே காணப்படுகிறது.


நவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

ஒவ்வொரு வருடமும் நவராத்திரி தினங்களான ஒன்பது நாட்களும் வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைத்து வழிபாடு செய்வார்கள். இதையொட்டி பலரும் தங்களது வீடுகளில் கொலு வைத்து வணங்குவர். வாழ்க்கையின் ஆதார சக்திகளான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்கும் வழிபாடே நவராத்திரி. மண்ணாலான பொம்மைகளை வைத்து வழிபடுவது, பூமாதேவிக்கு செய்யும் மரியாதையாகும்.


கொலு வைப்பது வாஸ்துப்படி மிகவும் நல்லது. அந்த வீட்டிலிருக்கும் சகல தோஷங்களும் விலகி, நன்மை பயக்கும்விதமாக அமையும்.

நவராத்திரி விழாவானது இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் தட்சிணாயம் மாதத்தின் ஆரம்பிப்பதால், இரவின் இருட்டையும், நம் மன இருட்டையும் நீக்கி, தன்னுடைய கண்களால் இந்த உலகுக்கு ஒளியை பிரகாசிக்கூடிய ஆதி சக்தியான அன்னை வணங்கும் விழாவாகும்.

மனித மனதில் காமம், கோபம், கருமித்தனம், மோகம், ஆணவம், பொறாமை ஆகிய ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள். அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் அம்பிகையே. இவர்களை அடக்கி ஆளும் சக்தியை நாம் பெற்று விட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

பூவுலகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால், பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பூஜைகளை பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்படுகிறது. நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவமாகும்.

Related Posts

Leave a Comment