தசரா திருவிழா: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

by Web Team
0 comment

தசரா திருவிழா: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) இரவில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1, 10, 11 ஆகிய முக்கிய விழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அரசின் வழிகாட்டுதல்படி, 2-ம் நாள் முதல் 9-ம் நாள் வரையிலும், 12-ம் நாளிலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைக்கு பதிலாக, கோவிலின் முன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனைக் காணவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில்களிலேயே துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். கோவில்களின் அருகிலேயே தசரா பிறை அமைத்து, அங்கு தங்கியிருந்து அம்மன் புகழை பாடி வழிபடுகின்றனர்.

தசரா திருவிழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கடலில் புனித நீராடி, கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்குகின்றனர்.

மேலும் கோவிலில் கொடியேற்றப்பட்டதும், விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமர், நாரதர், கிருஷ்ணர் போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசர், அரசி, குறவன், குறத்தி, போலீஸ்காரர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிவார்கள். பின்னர் உள்ளூர் பகுதியிலேயே காணிக்கை வசூலித்து, விழாவின் நிறைவு நாள் அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு சென்று காணிக்கையை செலுத்துகின்றனர்.

11-ம் நாளில் கோவிலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டதும், உள்ளூரில் உள்ள கோவில்களிலேயே பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடிக்கின்றனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, உடன்குடி பகுதியில் வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது உடல் அளவுக்கு ஏற்ப வேடப்பொருட்களை தயார் செய்வதற்கு ‘ஆர்டர்’ கொடுத்து அவற்றை வாங்கி செல்கின்றனர்.

குலசேகரன்பட்டினம் பகுதியில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் தலையாகவே காட்சி அளிப்பதால், தசரா திருவிழா இப்போதே களைகட்ட தொடங்கி உள்ளது.

Related Posts

Leave a Comment