திருமந்திரம் ( பாகம் 37 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 37 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்

“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்

பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்

மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை

மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே”

பாடல் எண் 246

மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.

தரும நெறி தவறுவோர் தண்டிக்கப்படுவர்

“தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை

அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி

எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே

மெய்த்தண்டம் செய்வதவ் வேந்தன் கடனே”                                                            பாடல் எண் 247

அவரவர் சமயத் தகுதிகளுக்கும், கோட்பாடு குறிக்கோள்களுக்கும் ஏற்ப, அவற்றை மேற்கொண்டு அதன்படி நடக்காதவர்களைச் சிவப்பரம்பொருள் எத்தகைய தண்டனைகள் வேண்டுமானாலும் தந்து, அவர்களை அதன் பயனான துன்பத்தை அடையச் செய்வான். இது அடுத்து வரும் பிறவியில் நடக்கப் போவது. எனவே இந்தப் பிறவியில் சமய நெறிப்படி நின்றொழுகா நீங்கள் உடல் வருந்தச் செய்யும் தண்டனையைத் தருவது அரசனுடைய கடமை ஆகும்.

வான் சிறப்பு

“அமுதூறு மாமழை நீரத னாலே

அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்

கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை

அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாகுமே”                                                         பாடல் எண் 248

பாக்கு, தென்னை மரங்களோடு, கரும்பும் வாழையும் தழைத்து அமுதச் சுவை அளிப்பது உயிர் அளிக்கும் அமுதம் போன்று இனிக்கும் மழையால்த்தான். எட்டிக்காய் மரம் வளர்வதுகூட இந்த மழையால்த்தான்.

அருள் வெள்ளப் பேராறு

“வரையிடை நின்றிழி வான்நீர் அருவி

உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்

நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்

கரையில்லை எந்தை கழுமணி யாறே”                                                            பாடல் எண் 249

மலைகளுக்கு நடுவே மழை நீர் சேரப் பெருகி வரும் அருவி எனக் கூறப்பட்டது பரம்பொருளாகிய சிவபெருமான் திருமுடியில் இருந்து விழுகின்ற சிறப்புக்குரிய ஆகாய கங்கையை உரைக்க வார்த்தை இல்லை. உள் மனத்துக்குள் இருந்து ஊறும் அமுதப் பொலிவு அது. இதில் நுரை இல்லை. தூசு இல்லை. மாசு இல்லை. எனவே பளிங்கு போல் தெளிந்த நீராயிருக்கின்ற இதற்கு, இந்த நீரருவிக்குக் கரையில்லை. இது பாவங்களைக் கழுவும் எந்தை பரம்பொருளின் அருள் வெள்ளப் பேராறு.

தானத்தின் சிறப்பு

“ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே”                                           பாடல் எண் 250

எல்லோருக்கும் கொடுத்துதவுங்கள். அவர், இவர், வேண்டியவர், வேண்டாதவர் என்று வேறுபாடு பார்க்காதீர்கள். வரும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்து பிறகு நீங்கள் உண்ணுங்கள். முன் சமைத்து மீந்து போன பழையதைப் பாதுகாத்து வைக்காதீர்கள். ஆசை அதிகம் உடையவர்களே அவசரம் அவசரமாகச் சாப்பிடாதீர்கள். ஆற அமர உண்ணுங்கள். தனியாக இருந்து சாப்பிடாதீர்கள். காகங்கள்கூடத் தம் இனத்தைக் கூவி அழைத்துக் கூட்டமாக இருந்து உண்ணுவதை உணருங்கள்.

அறம் செய்வார் அடையும் பயன்

“தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்

தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்

தாமறி வார்சிவ தத்துவர் ஆவர்கள்

தாமறி வார்க்குத் தமர்பரன் ஆமே”                                                                           பாடல் எண் 251

தான் என்னும் முனைப்பை விட்டுத் தனக்குள் இருக்கும் பரம்பொருள் தன்மையை உணர்ந்தறிந்த ஞானிகள் பரம்பொருளின் திருவடிகளை வணங்கியிருப்பர். இப்படித் தம்மை அறிந்தவர்களே அறவழியில் நிற்பவராவார். அதாவது மனம், வாக்கு, உடலால் எவர்க்கும் தீங்கு செய்யாத அன்புள்ளம் கொண்டவராய் இருப்பர். இதுவே அறவழியில் நிற்பதற்கான அடையாளம். தம்மை அறிந்த இத்தகைய ஞானிகள் தாமே சிவமாக, சிவத்தின் உண்மைப் பொருள் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். தம்மை அறிந்த இத்தகு தவசீலர்களுக்கு பரம்பொருளே உறவுடையவனாக உடனிருப்பான்.

எவரும் செய்யலாம் இதனை

“யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை

யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.”                                                           பாடல் எண் 252

இப்பாடலின் பொருள் “கடவுள் பூசைக்கு எங்கும் எவர்க்கும் எளிதாகக் கிடைக்கின்ற பச்சிலை போதும். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைப் பறித்து உணவாகத் தருவது எல்லோருக்கும் எளிதான ஒன்றுதானே. தாம் உண்ணும் போது ஒரு பிடி சோற்றை இல்லைஎன்று வருபவர்க்கு யாரும் தரலாமே! எல்லோரிடமும் அன்பாக இருப்பது, இனியவை கூறுவதுகூட எல்லோரும் செய்யக்கூடியதுதானே! இவற்றைச் செய்தால் இவையும் மேலான தருமங்கள்தான்.” என்பதாகும்.

 

Related Posts

Leave a Comment