நாளை முதல் மலை ரெயில் இயக்கம் -குன்னூர்-ஊட்டி

by Web Team
0 comment

நாளை முதல் மலை ரெயில் இயக்கம் -குன்னூர்-ஊட்டி

ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டும் நீலகிரியில் இயல்புநிலை திரும்பாமல் இருந்தது. தற்போது ஒரு மாதமாக பூங்காக்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயிலை இயக்க நீலகிரி கலெக்டர் அனுமதித்து உள்ளார். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு கேத்தி, லவ்டேல் வழியாக 9 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு குன்னூரை சென்றடையும். குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 1.50 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து ஊட்டியில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு குன்னூரை மாலை 3.10 மணிக்கு சென்றடையும். மாலை 4 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு 5.15 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு 6.40 மணிக்கு குன்னூரை சென்றடையும். நீலகிரியில் மலை ரெயிலில் பயணிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த மலை ரெயில் சேவையை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் தினமும் இயக்கப்படுகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்குவது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Related Posts

Leave a Comment