ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் பிரம்மோற்சவம் நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே பிரம்மோற்சவத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் வரும் 16-ம் தேதி முதல் நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது பக்தா்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானுக்கு அதிக மாதத்தின்போது இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெலுங்கு பஞ்சாங்க கணிப்பு முறைப்படி, அதிக மாதம் வந்ததால், தேவஸ்தானம் இரு பிரம்மோற்சவங்களை நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் முறைப்படி நடைபெற்று நிறைவுற்றது. ஆனால், கொவைட் 19 விதிமுறைகளையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, வாகன சேவைகள் மாடவீதியில் நடத்தப்படாமல் கோயிலுக்குள் தனிமையில் ஏகாந்தோற்சவமாக நடத்தப்பட்டது. எனவே, பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் வரும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசு பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், அவற்றின்படி, திருமலையில் வரும் அக்டோபா் மாதம் நவராத்திரியின்போது நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில், பக்தா்களை அனுமதிப்பது குறித்து, தேவஸ்தானம் ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக் கூட்டத்தில் பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.