சுக்கு காப்பியை தயாரிக்க தேவையான பொருள்கள்

by Web Team
0 comment

நான்கு பேர் பருகுவதற்கு…

தேவையான பொருட்கள் :

சுக்கு : ஒரு கட்டை விரல் அளவு

மல்லி : ஒரு கைப்பிடி

மிளகு : 5 முதல்10 எண்ணிக்கை (மிளகை அதிகமாகச் சேர்த்தால் காபியை குடிக்கும் போது விக்கல் வரும்)

கருப்பட்டி தூள் : 10–12 மேசைக்கரண்டி அளவு

(சுக்கு காபிக்கு இனிப்பு சுவை சற்று கூடுதலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். வெள்ளைச் சர்க்கரை மட்டும் சேர்க்க வேண்டாம்)

தயாரிக்கும் முறை :

நான்கு கப் காபி வேண்டுமென்றால், ஆறு கப் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
ஆறு கப் நீரை ஒரு டீ போடும் பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்க வைக்கும் அதே நேரத்தில் மேலே கூறிய சுக்கு, மல்லி, மிளகு மூன்றையும் ஒரு சிறிய இடி உரலில் இட்டு அவை உடையும் அளவுக்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இடி உரல் இல்லாவிட்டால் மிக்சியிலும் நொறுக்கிக் கொள்ளலாம். தூளாக்க வேண்டாம்.
உடைத்த சுக்கு, மல்லி, மிளகு இவற்றை கொதிக்கும் நீரில் அப்படியே கொட்டி விடுங்கள்.
மல்லியை நன்றாக வேகவிடவேண்டும். அப்போது தான் சுவையும் மணமும் கிடைக்கும். மல்லி வெந்த பிறகு ஆளை மயக்கும் மணம் வரும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.
ஆறு கப் நீர் நான்கு கப் நீராகும் அளவுக்குக் கொதிக்கவிட வேண்டும்.
மல்லி வெந்ததை உறுதி செய்த பிறகு அதில் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அப்படியே பாத்திரத்தை மெதுவாக இறக்கி வேறொரு பாத்திரத்தில் சுக்கு காபியை வடிகட்டிக் கொள்ளவும்.
அப்படியே டம்ளர்களில் பரிமாறிக் கொள்ளலாம்.
அவ்வளவு தான்…சுவையும் மணமும் திடமும் மிக்க சுக்கு காபி தயார்.

இந்த சுக்கு மல்லி காபியில் தேவைப்பட்டால் கொஞ்சம் சீரகம், மணத்திற்கு ஏலக்காய் கூட சேர்த்துக் கொதிக்க வைக்கலாம். ஆனால் எளிமையான சுக்கு காபி என்றால் சுக்கும், மல்லியும் இடித்து தயாரித்தாலே போதும்.

Related Posts

Leave a Comment