தவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய்

by Web Team
0 comment

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

முன்னணி நடிகா்கள் பலரது உதட்டசைவுக்கு தனது பின்னணிக் குரலால் உயிா் கொடுத்த எஸ்பிபி, அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதை ஆக்கிரமித்த ஆகச் சிறந்த கலைஞன் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு எஸ்.பி.பி. மகன் சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் பண்ணை இல்லத்துக்கு விஜய் வந்தபோது ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் பாதுகாப்பாக விஜய்யை அழைத்துச் சென்றார்கள். அப்போது ரசிகரின் காலணி ஒன்று தவறி கீழே விழுந்தது. காவலர்கள் பாதுகாப்புடன் நடந்து வரும்போது அக்காலணியைக் கண்ட விஜய் உடனே அதை எடுத்து ரசிகரிடம் தந்துவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் விஜய் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment