தாலி கயிற்றில் இருந்து எப்போது தங்க கொடிக்கு மாறியது?

by Web Team
0 comment

தங்கம், கும்பம், தீபம், தேங்காய், மஞ்சள், பழம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பம் ஆகியன மங்கலப் பொருள்கள். அவற்றில், தங்கம் முதன்மை பெறுகிறது. ‘மங்கலம்’ என்றால், நன்மையை நம்மில் இணைப்பவை; நல்லதை ஈட்டித் தருபவை; மன மகிழ்ச்சியை நிறைவுசெய்பவை என்கிறது சாஸ்திரம் (கல்யாணம் மங்களம் சுபம்). எனவே தாலிக் கொடிக்காக தங்கத்தைத் தேடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தலையில் சுட்டி, காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்தில் காசு மாலை, முழங்கைக்கு மேல் தோளுக்குக் கீழ் வங்கி, கையில் வளை, விரலில் மோதிரம், இடுப்பில் ஒட்டியாணம், சிறு வயதில் அரைஞாண்/ அரசு இலை இவை அத்தனையும் பெண்ணாகப் பிறந்தவளின் உடலில் மிளிரும். அத்தனையும் தங்கத்தால் ஆனவை. அத்துடன் நில்லாமல் கன்னத்தில் மஞ்சள், நெற்றியில் மஞ்சள் குங்குமம், வாயில் தாம்பூலம், கூந்தலில் புஷ்பம் ஆகியவையும் இணைந்திருக்கும். ஆண்களிலும் காதில் கடுக்கனும், கழுத்தில் மைனர் செயினும், விரலில் மோதிரமும், சிறு வயதில் தங்க அரைஞாணும், சிலரிடம் தங்கப்பல்லுமாக அவர்களுடைய அழகை இரட்டிப்பாக்கும். இப்படி ஆணிடமும் பெண்ணிடமும் தங்கம் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த அணிகலன்கள் அத்தனையும் அழகுக்கு அழகு சேர்க்கும்.

அணிகலன் என்ற தகுதியையும் தாண்டி, மனமகிழ்ச்சியை நிறைவு செய்வது தாலி. . அதனால்தான் அதை அணிகலன் என்று சொல்லாமல் ‘மாங்கல்யம்’ என்று சொன்னார்கள். மங்கலத்தைத் தரும் தங்கம் என்றார்கள். அதில் ‘திரு’வை இணைத்து ‘திருமாங்கல்யம்’ என்று பெருமைப்படுத்தினார்கள்.

தங்கக் கொடிக்கு எப்பொழுது மாறியது என்ற உங்கள் கேள்விக்கு பதில், மனிதர்களிடையே தங்கம் புழங்கத் தொடங்கிய காலத்திலிருந்து இது ஆரம்பித்திருக்கலாம்.அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களுக்கு நிகராக தங்கம் அணிந்திருக்கிறார்கள். ஆண்கள் அணிகிற நகைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. முடி, குண்டலம், வாகு வளையம், வீர கண்டை, அரைஞாண் போன்றவற்றை அணிந்தார்கள். பெண்கள் உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை ஸ்ரீதேவியார் பெருமணி, பூரப்பாலை வடபள்ளி, தென்பள்ளி, பூடகம், சூடாமணி, பொன்னறிமாலை ஆகியவற்றை அணிந்தார்கள். எனவே இந்தக் காலத்திலேயே தாலிக்கொடியும் அறிமுகமாகி இருக்கலாம்.

Related Posts

Leave a Comment