கோழி கறி ரசம் எப்படி செய்வது?

by Web Team
0 comment

எங்கள் வீட்டில் கோழி ரசம் செய்யும் முறையை விளக்குகிறேன்.

பொதுவாகவே, கோழி ரசமனாலே அது கூவாத நாட்டுக்கோழி சேவல் தாங்க தேர்வு. அதாவது சேவல் தலையில் சிறிது கொண்டை வெளிப்பட்டிருக்கும். அந்த கூவாத சேவல், அரைகிலோவிலிருந்து முக்கால் கிலோ வரைக்கும் இருக்கும்.

சரி செய்முறைக்கு வருவோம். தேவையான பொருட்கள்.

கூவாத சேவல்.

சுடுநீரில் அழுத்தி இறகுகளை பிய்த்து, காலில் முரப்பு தோல்களை உரித்து பின்னர் மஞ்சள் தூளை இலேசாக கோழி உடல் முழுவதும் தடவி இளந்தீயில் சிறிது வாட்டி பின்னர் கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதை துண்டுகளாக்கி அம்மியில் வைத்து நைய்த்து எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறு உரலில் போட்டு இடித்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர், மிளகு, சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை ஒவ்வொன்றையும் ஐந்து சின்ன கரண்டிகள் எடுத்து நன்கு அரைத்து வைத்து கொள்ளுங்கள். (உங்களுக்கு காரம் ஏற்பு திறன் பொறுத்து கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)

(மேலிருந்து கீழாக முறையே – மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை)

அடுத்து, ஒருகையளவு சின்ன வெங்காயம் வெட்டி வைத்து கொள்ளுங்கள். நன்கு பழுத்த ஒரு தக்காளி. இதை வெட்ட வேண்டாம் பிழிந்து விட வேண்டும். ஒருக்கட்டி பூண்டு மற்றும் சின்னதா இஞ்சி இதை இரண்டையும் நசுக்கி வைத்து கொள்ளுங்கள். இரண்டு மூனு பச்சை மிளகாயை கிழித்து வைத்து கொள்ளுங்கள்.

செய்முறைக்கு வருவோம்

அடுப்பில் சட்டியை வைத்து திட்டமான அளவுக்கு நல்லெண்ணெய் ஊத்தி, அது காய்ந்தவுடன் சிறிது சோம்பு போட்டு வெடிக்கவிட்டு, வெட்டிய சின்ன வெங்காயமும் கூடவே கிழித்த பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். இப்பொழுது உப்பு கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

வெங்காயம் வதங்கிய பின், நசுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை போட்டு பொன்நிறமாக வதக்கிய பின் தக்காளி நன்கு பிழிஞ்சி விடுங்க. கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்துக்குங்க.

தக்காளி நன்கு வதங்கிய பின், அரைத்து வைத்த அந்த மிளகு, சீரகம் மற்றும் கொத்தமல்லி தூளை போட்டு மீண்டும் வதக்கவும். இப்பொழுது நைய்த்து வைத்த கோழிக்கறியை போட்டு நன்கு வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

கோழிக்கறி பத்து நிமிடம் வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் ஊத்திவிட்டு (நான்கு குவளையிலிருந்து ஆறு குவளை வரைக்கும்) மூன்று கொதிகள் அடங்கிய பின் (அதாவது இருபது நிமிடங்கள் கழித்து) கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி மூடி வைத்து விடுங்கள்.

இப்பொழுது சுடச் சுட நாட்டுக்கோழி ரசம் தயார்…

Related Posts

Leave a Comment