ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ‘மாஸ்டர்’?

by Web Team
0 comment

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து, தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறார்கள். பல தயாரிப்பாளர்கள் வட்டிக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமே என்று ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால், இன்னும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழல் தெரியாமல் இருக்கிறது. அப்படித் திறக்கப்பட்டாலும் மக்கள் பயமின்றி வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.

தமிழில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘சூரரைப் போற்று’, ‘க/பெ ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தின. இதனால் தயாரிப்பாளர்கள் – திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

இதில் தொடக்கத்திலிருந்தே ‘மாஸ்டர்’ படம் ஓடிடி வெளியீடு என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது. இதற்கு, “திரையரங்க வெளியீடு தான்” என்று பதிலளித்து வந்தது படக்குழு. ஆனாலும், இடையே “ஓடிடி வெளியீட்டில் ‘மாஸ்டர்'” என்ற செய்தி மட்டும் வெளியான வண்ணம் இருந்தது.

இதனிடையே இன்று (செப்டம்பர் 12) ‘மாஸ்டர்’ படம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துவிட்டதாகவும், தீபாவளிக்கு வெளியீடு என்றும் தகவல் வெளியானது. இதற்காக பெரும் விலையை ஓடிடி தளம் கொடுத்துள்ளதால், ‘மாஸ்டர்’ படக்குழுவினர் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

இது தொடர்பாக ‘மாஸ்டர்’ படக்குழுவினரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

“பெரிய படங்கள் தயாரித்து வரும் படக்குழுவினரிடம் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இப்படியான செய்திகள் அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. ‘மாஸ்டர்’ படத்தைப் பொறுத்தவரை நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது. திரையரங்குகள் திறந்தவுடன் எப்போது வெளியீடு என்பது குறித்து முடிவு செய்யவுள்ளோம்”

இவ்வாறு ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தெரிவித்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment