சபரிமலை கோவிலுக்கு செல்ல தமிழக பக்தர்களுக்கு அனுமதி இல்லை

by Web Team
0 comment

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

கொரோனா பிரச்சினையால் கடந்த 5 மாதங்களுக்கு மேல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜைக்கு ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலை திறந்தால் அங்கு கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு உருவாக்கப்பட்டது.

இக்குழுவில் குளோபல் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜசேகரன் நாயர், பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ‌ஷபிப் பசுலுதீன் கோயா, மஞ்சேரி அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் அல்தாப் அலி மற்றும் சாகுல் இப்ராகிம் ஆகியோர் கொண்ட குழு சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஆலோசனை மேற்கொண்டது.

இக்குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதில் குறிப்பாக இந்த ஆண்டு நடக்க இருக்கும் மண்டல பூஜை விழாவின்போது கேரள பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மண்டல பூஜையின்போது 5 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இதுதவிர கேரளாவில் வசிக்கும் வெளி மாநிலத்தவரையும் 60 சதவீதம் அளவுக்கு அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. டாக்டர்கள் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அரசின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்பட உள்ளது. அதன்பிறகே இந்த விவகாரத்தில் அரசு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என தெரிகிறது.

டாக்டர்கள் குழு பரிந்துரைப்படி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழாவில் கேரளாவை தவிர தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா பக்தர்கள் சபரிமலை செல்ல வாய்ப்பு இருக்காது என்றே தெரிகிறது.

Related Posts

Leave a Comment