தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா… – நடிகை ஜெயசித்ரா

by Web Team
0 comment

துடுக்குத் தனமாகவும் குறும்புத்தனமாகவும் கொண்ட நடிகைகள் அப்போதும் இருந்திருக்கிறார்கள். நடிகை பானுமதி, அப்பேர்ப்பட்ட கேரக்டரில் நிறையவே நடித்திருக்கிறார். ஆனால் அதில் அவருடைய புத்திசாலித்தனமும் கூடவே இருக்கும். சரோஜாதேவியிடமும் ஈ.வி.சரோஜாவிடமும் இவை இருந்தன. ஆனாலும் ‘இன்னசென்ட்’ என்பதை அவர்களிடமும் பார்க்கமுடியாது. இந்த காலகட்டங்களைக் கடந்து, எழுபதுகளில்… குரலாலும் உடல் மொழியாலும் துடுக்குத்தனத்தையும் குறும்பு குணத்தையும் அப்பாவித்தனத்தையும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தையும் என சம விகிதத்தில் கலந்து, கலக்கியெடுத்தார். அவர்… ஜெயசித்ரா.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். குழந்தை நட்சத்திரமாகவே நடிக்கத் தொடங்கியவர்தான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘குறத்தி மகன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ அவரை வெகுவாக அடையாளம் காட்டியது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலும் ஜெயசித்ராவும் ‘அரங்கேற்றம்’ மூலமாக, அடுத்த இன்னிங்க்ஸிற்கு அரங்கேற்றமானார்கள்.

ஜெயசித்ராவின் ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேசும் ஸ்டைலும் நாக்கை துருத்திக்கொண்டு லேசாக ஆட்டுகிற ஸ்டைலும் புறங்கையைக் கட்டிக்கொண்டு பேசுகிற மாடுலேஷனும் அன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி எல்லோரையுமே கவர்ந்தன. இது ஜெயசித்ராவின் ஸ்டைல் என்று கொண்டாடினார்கள்.

‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன, தியாகத்தால் எமை வளர்த்த தெய்வத்துக்கு லாபமென்ன…’ எனும் பாடலின் முகபாவங்களில், பின்னாளில் மிகப்பெரிய ரவுண்டு வரப்போகும் நடிகை என்பதை அழகாக நிரூபித்திருந்தார். கலாய்த்து நடிப்பதிலும் கவலைகளை தேக்கிக்கொண்டுமாக உணர்ச்சிக்குவியலை தன் கண்களிலும் முகத்திலும் முக்கியமாக உதட்டிலும் காட்டிவிடுகிற தேர்ந்த நடிகை என்று அப்போதே கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள்.

பாலசந்தரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று நாயகிகள் என்றாலும் ஜெயசித்ராவின் பாத்திர வார்ப்பும் அவரின் அலட்சியமான சவால் விடுகிற மேனரிஸப் பேச்சும் ரொம்பவே கொள்ளைகொண்டன. கமலும் ஜெயசித்ராவும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தார்கள்.

Related Posts

Leave a Comment