இன்றைக்கு மிக உச்சத்தில் இருக்கிற நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்தின் திரை வாழ்வில் ‘மங்காத்தா’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அது அஜித்தின் ஐம்பதாவது படம். அதேபோல், அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘அமர்க்களம்’ அஜித்தின் 25வது படம். இது, அஜித்தின் திரைப்பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துவிட்டது. முதல் படமான ‘அமராவதி’யும் அப்படித்தான். ஆனால், அஜித்தின் திரை வாழ்வில், மிக மிக முக்கியமான படம்… ‘ஆசை’. அஜித்துக்குக் கிடைத்த முதல் வெற்றிப் படம் இதுதான். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. 95ம் ஆண்டு படம் வெளியானது. படம் வெளியாகி 25ம் ஆண்டுகளாகின்றன.
சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், செல்வா இயக்கிய படம் ‘அமராவதி’. இந்தப் படம்தான் அஜித்தின் முதல் படம். பாலபாரதி இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனாலும் படத்தில் அஜித்தைப் பார்த்துவிட்டு, ‘யார் இது’ என்று ரசிகர்கள் கேள்விகேட்டுக்கொண்டனர். இங்கே ஒரு கொசுறு தகவல்… இதில் அஜித்துக்கு குரல் கொடுத்திருந்தவர் நடிகர் விக்ரம்.