சபரிமலை மண்டல பூஜை விழாவில் 5 ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி

by Web Team
0 comment

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், ஜனவரி மாதம் மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது.

கொரோனா பிரச்சினையால் வழிபாட்டு தலங்கள் மூடிக்கிடந்த நிலையில் சமீபத்தில்தான் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. கோவிலுக்கு வருவோருக்கு சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தொடங்க உள்ள மண்டல பூஜைக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது பற்றி டாக்டர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. இக்குழுவினர் கூறியதாவது:-

சபரிமலையில் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜை 42 நாட்கள் தொடர்ந்து நடக்கும். இந்த விழாவின் போது கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். வரிசையில் நிற்க ஏராளமானோர் திரண்டால் அங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதையும் தடுக்க வேண்டும். மண்டல பூஜையின் போது தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

இவர்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் வந்தால் அவர்கள் மூலமும் இங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே ஹஜ் பயணத்தின் போது குறைவானோருக்கே அனுமதி வழங்கியதன் மூலம் நோய் கட்டுக்குள் வைக்கப்பட்டது. அதே பாணியை இப்போதும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்குழுவில் இடம்பெற்ற டாக்டர் ராஜசேகரன் நாயர் கூறும்போது, சபரிமலை மண்டல சீசன் காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இதற்காக மண்டல பூஜை நடைபெறும் 42 நாட்களில் கோவிலுக்கு 5 ஆயிரம் பக்தர்களை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளோம், என்றார்.

Related Posts

Leave a Comment