திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

by Web Team
0 comment

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டதாலும், இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதாலும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் வழிபாட்டுத் தலங்கள், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. பின்னர் படிப்படியாகச் செய்யப்பட்ட தளர்வின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.

சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். தர்பாரண்யேஸ்வரர் கோயில் திறக்கப்பட்டும், பொதுப் போக்குவரத்து இல்லாதது, இ-பாஸ் நடைமுறைகள், உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தின் அடுத்தகட்ட தளர்வுகளில் நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது, தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது போன்ற காரணங்களால் சனிக்கிழமையான இன்று (செப். 5) திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

இன்று காலை முதல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை பக்தர்கள் சுமார் 2,500 பேர் வந்திருக்கக் கூடும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பக்தர்கள் சானிடைசர் மூலம் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 5 மாதங்களுக்குப் பின்னர் அதிக அளவில் பக்தர்கள் வருகை இருந்த நிலையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment